புதன், 2 அக்டோபர், 2013

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ இயலுமா?

இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில், பலருக்கும் செவ்வாய் கிரகத்தைக் கண்டால் ஆகாது. செவ்வாய் தீங்கு விளைவிக்கின்ற கிரகம் என்ற நம்பிக்கையே அதற்குக் காரணம். செவ்வாய் கிரகத்தைப் பிடிக்காது என்பதால் செவவாய்க் கிழமையைக் கூட ஒதுக்கிவிடுவார்கள். அக்கிழமையில் புதிய முயற்சிகளைத் தொடங்க விரும்ப மாட்டாகள். ஆனால் வானவியல் நிபுணர்களுக்கும் விண்வெளித் துறையினருக்கும் செவ்வாய் மிகவும் வேண்டப்பட்ட கிரகமாகும்.


 நீல நிறத்தில் உள்ளது பூமியின் சுற்றுப்பாதை.
சிவந்த நிறம் செவ்வாயின் சுற்றுப்பாதை.
டெலஸ்கோப் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து அதிகம் ஆராயப்பட்ட கிரகம் செவ்வாய் தான். வாய்ப்பான சமயத்தில் செவ்வாய் கிரகத்தை விடிய விடியத் தொடந்து ஆராய்ந்து கொண்டே இருக்கலாம். மனிதன் வேறு ஒரு கிரகத்துக்கு போக விரும்பினால செவ்வாய் கிரகம் ஒன்றுக்குத் தான் செல்ல முடியும். ஆகவே தான் வேறு எந்த கிரகத்தையும் விட செவ்வாய்க்குத் ஆளில்லா விண்கலங்கள் நிறைய அனுப்பப்பட்டன. இப்போது கியூரியாசிடி விண்கலம் அனுப்பப்படுகிறது.

மற்ற கிரகங்களை விட செவ்வாயைப் பற்றித் தான் நிறைய நூல்கள் வெளியாகியுள்ளன. ஹாலிவுட் படத் தயாரிப்பாளர்களும் செவ்வாயைப் பின்புலனாக வைத்து நிறைய திரைப்படங்களை எடுத்துள்ளனர்.

சூரிய மண்டலத்தில் பூமியும் செவ்வாயும் அடுத்தடுத்த சுற்றுப்பாதைகளில் அமைந்துள்ளன. இரவு வானில் வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய கிரகங்களில் செவ்வாயும் ஒன்று. வானவியலின்படி செவ்வாய் இப்போது சிம்ம ராசியில் உள்ளது. நீங்கள் அதிகாலை நான்கு மணி வாக்கில் எழுந்து வானைப் பார்த்தால் செவ்வாய் கிரகம் தலைக்கு மேலே தெரியும். சிவந்த நிறத்தில் ஒளிப்புள்ளியாகத் தெரியும். அதன் நிறத்தை வைத்துத் தான் அக்கிரகத்துக்கு செவ்வாய் என்று நமது முன்னோர்கள் பெயரிட்டுள்ளனர்.
வடிவத்தில் செவ்வாய் கிரகம் பூமியை விடச் சிறியது. செவ்வாய் கிரகத்தில் மலைகள் உள்ளன. வட்ட வடிவப் பள்ளங்கள் நிறைய உள்ளன. நதிகள் ஓடிய தடங்கள் உண்டு. ஆனால் நதிகள் இல்லை. செவ்வாய் கிரகம் வெறும் பொட்டல். உயிரினம் ஏதுமில்லை.
இடது புறம் பூமி.
வலது புறம் உள்ளது செவ்வாய்.
செவ்வாய் கிரகத்தில் உள்ள அவிந்து போன எரிமலை எவரெஸ்ட் சிகரத்தை விட உயரமானது. சூரிய மண்டலத்திலேயே இது தான் மிக உயரமான சிகரமாகும்.

பல்வேறு காரணங்களால் மனிதன் புதன் கிரகத்தில் அல்லது வெள்ளி (சுக்கிரன்) கிரகத்தில் போய்க் குடியேற முடியாது. சந்திரனும் ஒத்து வராது. சந்திரனில் பகல் என்பது இரண்டு வாரம். இரவும் அப்படித்தான். இத்துடன் ஒப்பிட்டால் செவ்வாய் கிரகத்தில் பகல் என்பது 12 மணி நேரமே. இரவும் அதே போலத்தான். தவிர,செவ்வாய் கிரகத்தில் காற்று மண்டலம் உள்ளது. சந்திரனில் இல்லை.

 செவ்வாயில் சூரிய அஸ்தமனம்.
ஸ்பிரிட் ஆய்வுக்க்லம் எடுத்த படம்.
பூமியின் காற்று மண்டலத்தில் நாம் சுவாசிப்பதற்கு மிக அவசியமான ஆக்சிஜன் வாயு 21 சதவிகித அளவுக்கு உள்ளது. செவ்வாயில் ஆக்சிஜன் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவு. கார்பன் டையாக்சைட் 95 சதவிகித அளவில் உள்ளது. ஆனால் நவீன தொழில் நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி செவ்வாயின் கார்பன் டையாக்சைடிலிருந்து ஆக்சிஜனைப் பிரித்துப் பயன்படுத்தலாம். தவிர, பெரிய பசுமைக் குடில்களை அமைத்து அவற்றுக்குள் செடி கொடிகளை வளர்த்தால் ஆக்சிஜன் கிடைக்கும்.

 செவ்வாயின் நிலப்பரப்பு.
தரை சிவப்பாக உள்ளதைக் கவனிக்கவும்.
செவ்வாய் கிரகத்தில் என்றோ பெரிய நதிகள் ஓடியதற்கான அடையாளங்கள் உள்ளன என்றாலும் இன்று செவ்வாயில் தண்ணீர் இல்லை. எனினும் செவ்வாயின் வட துருவப் பகுதியில் நிலத்துக்கு அடியில் உறைந்த நிலையில் - பனிக்கட்டி வடிவில் - நீர் உள்ளதாக அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேற முடியும். எனினும் வெளிக்காற்று நுழைய முடியாத, அத்துடன் வலுவான கூரை கொண்ட, கூட்டுக்குள் தான் வாழ இயலும். செவ்வாயின் காற்று மண்டலம் அடர்த்தியானது அல்ல என்பதால் சூரியனிலிருந்தும் விண்வெளியிலிருந்தும் வரக்கூடிய ஆபத்தான கதிர்களிலிருந்து பாதுகாப்பு தேவை. ஆகவே தான் இப்படி கூட்டுக்குள் வாழ்ந்தாக வேண்டும்.

 செவ்வாயில் இப்படியாக நிறுத்தப்பட்டுள்ள
கூட்டுக்குள் தான் வாழ வேண்டும் . படம் : நாஸா
பூமி நல்ல அடர்த்தியான காற்று மண்டலத்தைப் பெற்றுள்ளது என்பதால் அக்காற்று மண்டலம் ஆபத்தான கதிர்களைத் தடுத்து விடுகிறது. அத்துடன் விண்வெளியிலிருந்து வந்து விழும் விண்கற்கள் பூமியின் காற்று மண்டலத்தில் நுழைந்ததும் உராய்வு காரணமாகத் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகி விடுகின்றன. இப்படியான பாதுக்காப்பை செவ்வாயின் காற்று மண்டலம் அளிக்காது.

செவ்வாயில் காற்று மண்டலத்தின் அடர்த்தியைத் திட்டமிட்ட முறையில் செயற்கையாக அதிகரிக்க முடியும் என்றும் காற்று மண்டல ஆக்சிஜன் அளவையும் அதிகரிக்க முடியும் என்று பல நிபுணர்கள் கூறுகின்றனர்.  இதற்கு Terraforming என்று பெயர். இதற்கான பல வழிமுறைகளும் கூறப்பட்டுள்ளன. இவையெல்லாம் அறிவியல் ரீதியில் சாத்தியமே. செவ்வாயின் வட துருவப் பகுதியிலிருந்து தண்ணீரைப் பெற்றுக் கொள்வதும் சாத்தியமே என்று கூறப்படுகிறது.

 செவவாய் கிரகம் இப்போது
செவ்வாய் கிரகத்தில் மேலும் இரு பிரச்சினைகள் உள்ளன். பூமியில் உள்ளது மாதிரியில் அங்கு வெயில் கிடையாது. குளிர், கடும் குளிர் என இந்த இரண்டைத்தான் காண முடியும். சில சமயங்களில் செவ்வாயில் புழுதிப் புயல் தோன்றும். வானமே தெரியாது. கிரகம் முழுவதையும் சூழ்ந்து வீசுகின்ற இப்புயல பல வாரங்களுக்கு நீடிக்கும்.

செவ்வாயின் காற்று மண்டலத்தை
மாற்றியமைத்தால் இப்படி காட்சி அளிக்குமாம்
இவை அனைத்தையும் சமாளித்து செவ்வாயில் வாழ முடியலாம் என சில நிபுணர்கள் கூறுகின்றனர் .எவ்விதமான கூடாரங்கள் தேவை, ஆக்சிஜனை எப்படி உற்பத்தி செய்து கொள்வது, செடி கொடிகளை எவ்விதம் வளர்ப்பது என பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு நடைமுறை சாத்தியமான திட்டங்கள் ஏட்டளவில் தயாரிக்கப்பட்டுத் தயாராக உள்ளன. தனியார் துறை நிபுணர்களும் பல திட்டங்களை தீட்டியிருக்கிறார்கள்.

செவ்வாயில் திட்டமிட்ட ரீதியில் மககளைக் குடியமர்த்த வேண்டும் என்று கூறும் தனியார் அமைப்புகள் பல உள்ளன. Mars Society, Red Colony போன்றவை அவற்றில் அடங்கும். செவ்வாயில் மனிதன் குடியேறுவதானால் என்னென்ன செய்ய வேண்டும் என்று கூறி கடந்த காலத்தில் எண்ணற்ற கட்டுரைகள் வெளியாகியுள்ளன. நிபுணாகள் எழுதிய பல நூல்களும் வெளியாகியுள்ளன். செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் நோக்கில் தான் செவ்வாய் கிரகம் மேலும் மேலும் விரிவாக ஆராயப்படுகிறது.

செவ்வாய்க்குச் செல்வதற்கான ராக்கெட்டுகளையும் விண்கலங்களை உருவாக்கி மற்ற ஏற்பாடுகளையும் செய்வதானால் பல லட்சம் கோடி ரூபாய் தேவை. இப்போதுள்ள நிலையில் அமெரிக்காவால் மட்டுமே செவ்வாய்ப் பயணத் திட்டத்தை மேற்கொள்ள இயலும். அமெரிக்காவுக்கு பல நிதிப் பிரச்சினைகள் இருக்கும் போது செவ்வாய்ப் பயணத் திட்டத்துக்கு இப்போது அவசரம் ஏதுமில்லை தான்.

ஆனால் நாட்டின் கௌரவம் நிலை நாட்டப்பட வேண்டும் என்று நினைத்தால் செலவு அம்சம் பெரிதாகத் தெரியாது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் (இப்போதைய ரஷியாவையும் மற்றும் பல நாடுகளையும் உள்ளடக்கிய பெரிய நாடு) இடையே கடும் போட்டியும் விரோதமும் நீடித்து வந்தது. அப்போது சோவியத் யூனியன் விண்வெளியில் மேலும் மேலும் சாதனைகளை நிகழ்த்தி உலகை அதிசயிக்க வைத்தது. அவ்வித நிலையில் அமெரிக்கா மீதான மதிப்பு குறையலாயிற்று.

அக்காலகட்டத்தில் தான் சந்திரனுக்கு மனிதனை அனுப்பி சாதனை நிகழ்த்துவோம் என அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி 1961 ஆம் ஆண்டில் சபதம் ஏற்றார். சோவியத் யூனியனை மிஞ்ச வேண்டும் என்ற வேகத்தில் அமெரிக்க அரசு பெரும் பணத்தை ஒதுக்கிய போது அமெரிக்க சட்டமன்றம் உற்சாகத்துடன் அனுமதி அளித்தது. நாட்டு கௌரவமே முக்கியம் என்று கருதி மக்களும் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்துக்கு பெரும் பணம் செலவிடப்படுவதை ஆட்சேபிக்கவில்லை.

ஆனால் இப்போதுள்ள நிலையில் செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்துக்குப் பெரும் பணம் ஒதுக்குவதை அமெரிக்க சட்டமன்றமோ, அமெரிக்க மக்களோ ஆதரிக்க மாட்டார்கள். அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் ஆகியவை ஒன்றாகச் சேர்ந்து இத்திட்டத்தை நிறைவேற்ற வாய்ப்பு இருப்பதாகத் தோன்றவில்லை.

சீனா இப்போது விண்வெளித் துறையில் வேகமாக முன்னேறி வருகிறது. வருகிற ஆண்டுகளில் சீனா செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்பப்போவதாக அறிவித்தால் உடனே அமெரிக்கா வீறு கொண்டு எழுந்து சீனாவை முந்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் செவ்வாய்ப் பயணத் திட்டத்தை அவசர அடிப்ப்டையில் மேற்கொள்ள முற்படலாம்.

மனிதன் சிருஷ்டித்த ‘திரிசங்கு சொர்க்கம்’

திரிசங்கு மகாராஜாவுக்காக விசுவாமித்திர முனிவர் தமது தவ வலிமையால், சொர்க்கத்துக்கும் பூமிக்கும் இடையே தனி சொர்க்கத்தை சிருஷ்டிக்க, அது திரிசங்கு சொர்க்கம் என்று பெயர் பெற்றது என்பது புராணக் கதை. மனிதன் அவ்வாறு பூமிக்கு மேலே சிருஷ்டித்துள்ளது தான் சர்வதேச விண்வெளி நிலையம். மனிதனின் தொழில் நுட்ப வலிமை அதை சாத்தியமாக்கியது.


இரு புறங்களிலும் செங்குத்தாக உள்ள பட்டைகள் சூரிய ஒளியை  மின்சாரமாக
மாற்றுபவை. வெண்மை நிறப் பட்டைகள் வேறு வகையானவை.
அவற்றுக்கு கீழே உள்ளது தான் சர்வதேச விண்வெளி நிலையம்
இதை நிர்மாணிப்பதற்கான தொடக்க வேலைகள் 1998 ல் மேற்கொள்ளப்பட்டு, 2000 ஆம் ஆண்டில் முதல் குழுவாக ஆறு விண்வெளி வீரர்கள் அதில் குடிபுகுந்தனர். அப்போதிலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்தில் தொடர்ந்து விண்வெளி வீரர்கள் தங்கிப் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு தடவையும் மூவர் அடங்கிய குழு உயரே அனுப்பப்படுகிறது. அவர்கள் ஆறு மாத காலம் தங்கி பல ஆராய்ச்சிகளில் ஈடுபடுகின்றனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தை ஐந்து பெட்ரூம் கொண்ட வீட்டுக்குச் சமம் எனலாம். அந்த அளவுக்கு அதில் இடவசதி உள்ளது. ஆனால் ஆராய்ச்சிக் கருவிகள் நிறைய இடத்தை அடைத்துக் கொள்கின்றன. இதுவரை பல்வேறான துறைகளில் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. விண்வெளி வீரர்கள் உயரே செல்வதே பல பரிசோதனைகளை நடத்துவதற்குதான்.

அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய யூனியன், கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் சேர்ந்து தான் சர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்கியுள்ளன. எனினும் இந்த விண்வெளி நிலையத்தில் அந்தந்த நாடுகளுக்கென தனிப் பிரிவுகள் கிடையாது. அமெரிக்கப் பகுதி, ரஷியப் பகுதி என இரண்டு பகுதிகள் மட்டுமே உண்டு.

விண்வெளி நிலையத்தில் நீண்ட நாள் தங்கினால்
கால்களுக்குப் பயிற்சி தேவை
இந்த விண்வெளி நிலையம் ஒரே முயற்சியில் உருவாக்கப்பட்டதல்ல. முதல் பகுதியை ரஷியா தனது ராக்கெட் மூலம் உயரே செலுத்தியது. பின்னர் அமெரிக்க ஷட்டில் வாகனங்கள் அடுத்தடுத்து எடைமிக்க பகுதிகளை உயரே கொண்டு சென்றன. ஐரோப்பிய யூனியன், ஜப்பான் ஆகியவை பெரிய பகுதிகளை அளித்தன. கனடா நாடு ராட்சத கிரேன் ஒன்றை அளித்தது. இவை எல்லாம் விண்வெளியில் ஒன்று சேர்க்கப்பட்டன.

சர்வதேச விண்வெளி நிலையத்தின் நீளம் 51 மீட்டர். அகலம் 109 மீட்டர். உயரம் 20 மீட்டர். மொத்த எடை 450 டன். சில சமயம் இது சுற்றுகின்ற உயரம் சற்றே குறையும். உயரத்தை மறுபடி அதிகரிக்க தக்க ஏற்பாடு உள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டவர்களில் அமெரிக்க, ரஷிய விண்வெளி வீரர்களின் எண்ணிக்கை தான் அதிகம். எனினும் கனடா மற்றும் ஜப்பானைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது அனுப்பப்படுகின்றனர். ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகள் என்ற முறையில் பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், பிரிட்டன், ஜெர்மனி ஆகியவற்றைச் சேர்ந்த விண்வெளி வீரர்களும் உயரே அனுப்பப்படுகின்றனர்.

அமெரிக்கா ஆரம்ப காலத்தில் இளைஞர்களை அனுப்புவதில்லை என்ற கொள்கையைக் கடைப்பிடித்து வந்தது. நாற்பது வயதை எட்டும் கட்டத்தில் தான் பொறுப்புணர்வு, சொன்னபடி செய்யும் குணம் ஆகியன இருக்கும் என்று நிபுணர்கள் கருதியதே இதற்குக் காரணம். இப்போது இக்கொள்கை தளர்த்தப்பட்டுள்ளது. ரஷியா இது விஷயத்தில் கண்டிப்பான கொள்கை எதையும் பின்பற்றவில்லை.

சர்வதேச விண்வெளி நிலையம் சுமார் 380 கிலோ மீட்டர் உயரத்தில் பறக்கிறது. அந்த உயரத்தில் இருந்தபடி அது மணிக்கு 27 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் ஓயாது பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கிறது  (விண்வெளியில் எதுவும் நிலையாக ஓரிடத்தில் இருக்க முடியாது). ஒரு தடவை சுற்றி முடிக்க 91 நிமிஷமே ஆவதால் அது ஒரு நாளில் பூமியை 15 தடவை சுற்றும். ஆகவே சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் அவ்வளவு தடவை சூரிய உதயத்தையும் சூரிய அஸ்தமனத்தையும் காண்பார்கள். ஆகவே அவர்களின் பகலும் இரவும் நமக்கு உள்ளதைப் போல இருப்பதில்லை.

விண்வெளி வீரர்களின் தூக்கம், பணி நேரம் முதலியன கீழே கட்டுப்பாட்டுக் கேந்திரத்தினால் நிர்ணயிக்கப்படுகின்றன. விண்வெளி வீரர்கள் வானில் நல்ல வேகத்தில் பூமியைச் சுற்றுவதை உணரமாட்டார்கள். நிலையாக ஓரிடத்தில் இருப்பது போலவே அவர்களுக்குத் தோன்றும். அதே நேரத்தில் அவர்களால் பூமி தனது அச்சில் சுழல்வதைக் காண இயலும்.

விண்வெளி நிலையத்துக்குள்
மேல் கீழ் என்பது கிடையாது
விண்வெளி என்பது பொதுவில் மனிதன் வாழ லாயக்கற்ற பிரதேசம். சர்வதேச விண்வெளி நிலையம் பறக்கின்ற உயரத்தில் ‘எடையற்ற நிலை’ தோன்றும். ஈர்ப்பு சக்தி என்பது அனேகமாக இராது. கையில் பிடித்துள்ள தம்ளரை விட்டால் அப்படியே அந்தரத்தில் நிற்கும். அல்லது இஷடத்துக்கு எந்தப் பக்கம் வேண்டுமானாலும் நகரும். மேல் கீழ் என்பதே இராது.  விண்கலத்துக்குள்ளாகக் கால் ஊன்றி நிற்க இயலாது. விண்கலத்தின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு அந்தரத்தில் மிதந்தபடி தான் செல்ல வேண்டும். சொல்லப் போனால் கால்களுக்கு வேலையே இல்லை.

போல்ட் ஸ்குரூ போட்டு முடுக்கி இருந்தால் ஒழிய மேஜை பறக்கும். கையில் எடுத்த தட்டை விட்டால் பறக்கும். ஸ்பூனில் எடுத்தால் வாய் அருகே கொண்டு செல்லு முன்னர் ஸ்பூனில் உள்ள உணவுப் பொருள் பறக்கும். தண்ணீர் குடிக்கலாம் என்றால் தம்ளரிலிருந்து தண்ணீர் வாய்க்குள் விழாது. தனித் தனி உருண்டைகளாக மாறி விண்கலத்துக்குள் நாலாபுறங்களிலும் பறக்கும். பணி புரியும் போதும் இப்படியான பிரச்சினைகள் தோன்றும். ஸ்குரூ டிரைவரை மறந்து அருகில் வைத்தால் அது பறந்து விண்கலத்தில் உயரே எங்காவது மூலையில் அந்தரத்தில் நிறகும்.

கைக்கு எட்டிய சாக்லேட் வாய்க்கு எட்டுமா?
படுக்கையில் படுக்க முடியாது. கொஞ்ச நேரத்தில் அந்தரத்தில் மிதப்பார்கள். விண்கல சுவரில் கோணிப்பை போல ஒரு பையைத் தொங்க விட்டு அதனுள் நுழைந்து கொண்டு உறங்கலாம். கஷ்டமாக இராது. ஈர்ப்பு சக்தி அனேகமாக இராது என்பதால் அன்றாட வேலைகளில் எண்ணற்ற பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருக்கும்

விண்வெளியில் உள்ள நிலைமைகள் உடலை பல வகைகளில் பாதிக்கும். கால்களுக்கு வேலை இல்லை என்பதால் அவை சூம்பிப் போனவை போல ஆகிவிடும். ஆகவே கால்களுக்குப் பயிற்சி அளிக்க விண்கலத்தில் சைக்கிள் பாணியிலான பயிற்சிக் கருவி இருக்கும். அதில் ஏறி உட்கார்ந்து சில மணி நேரம் பெடல் செய்தாக வேண்டும். புஜங்களும் மார்புப் பகுதியும் பெருத்து விடும். உயரம் சில செண்டிமீட்டர் அதிகரிக்கும். பூமிக்குத் திரும்பியவுடன் கால்களை ஊன்றி நிற்க இயலாது. எனினும் இவை எல்லாம் பூமிக்குத் திரும்பிய சில நாட்களில் சரியாகிவிடும்.

விண்வெளி வீரர்களுக்கென கீழே இருந்து மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை அனுப்பப்படுகின்ற ரெடிமேட் உணவுகளை சுட வைத்து சாப்பிட வேண்டும். அவற்றில் மெக்சிகோ வகை சுக்கா ரொட்டி முக்கிய அயிட்டம்.

சுக்கா ரொட்டி அடங்கிய தட்டு அந்தரத்தில் மிதக்கிறது
நடமாட்டம், உணவு, தூக்கம் எனப் பலவகைகளிலும் பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றைச் சமாளித்து அப்பிரச்சினைகளுக்கு இடையே தான் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டாக வேண்டும்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு அவ்வப்போது உணவு, தண்ணீர், காற்று, மருந்து போன்றவற்றை அவ்வப்போது எடுத்துச் சென்ற அமெரிக்க விண்வெளி ஷட்டில் வாகனங்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அவை அமெரிக்க மியூசியங்களுக்கு அனுப்பப்பட்டு விட்ட்ன. ஆகவே இப்போது ரஷியாவின் சரக்கு வாகனங்களும் சோயுஸ் விண்கலங்களும் (Soyuz) தான் இப்பணிகளைச் செய்து வருகின்றன. சோயுஸ் விண்கலங்கள் மூலம் தான் அவ்வப்போது விண்வெளி வீரர்கள் உயரே செல்கின்றனர் அல்லது அங்கிருந்து திரும்புகின்றனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு எதிர்பாராத விபத்து அல்லது ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. ஏற்கெனவே விண்ணில் செலுத்தப்பட்டு செயல் இழந்த பல செயற்கைக்கோள்கள் அல்லது அவற்றின் கழன்று போன உறுப்புகள் அதே உயரத்தில் தான் பறக்கின்றன். இவை சர்வதேச விண்வெளி நிலையத்தின் மீது மோதி சேதத்தை உண்டாக்கலாம்.

அண்மையில் இப்படி ஒரு நிலைமை ஏற்படலாம் என்று தோன்றிய போது விண்வெளி நிலையத்தின் பாதை சற்றே மாற்றப்பட்டு விபத்து தவிர்க்கப்பட்டது. சூரியனில் கடும் சீற்றங்கள் ஏற்படும் போது ஆபத்தான துகள்கள் பாய்ந்து வரும். அவ்வித நிலைமைகளில் விண்வெளி வீரர்கள் விண்கலத்தில் மிகவும் பாதுகாப்பான பகுதிக்குச் சென்று ஒண்டிக் கொள்வர். கீழே வருவதற்கான விண்கலம் ஒன்று எப்போதும் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தபடி இருக்கும். ஆகவே மிக ஆபத்தான நிலைமை தோன்றினால் அதன் மூலம் பூமிக்குத் திரும்பி விடுவர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தை 2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு கைவிடுவதென ஒரு திட்டம் உள்ளது. இதை 2028 ஆம் ஆண்டு வரை நீடிக்கலாம் என்று அண்மையில் ரஷியா யோசனை கூறியுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் பரிசோதனைகளை நடத்த இந்தியாவின் விண்வெளி அமைப்பான இஸ்ரோ (ISRO) விரும்புவதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது. இந்த விண்வெளி நிலையத்தை நிர்வகிக்கும் நாடுகளின் குழுவில் இந்தியா இல்லை (சீனாவும் இல்லை) என்பதால் இந்திய விண்வெளி வீரர்கள் சரவதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் வாய்ப்புகள் இல்லை.

விண்வெளியில் நீண்ட நாட்கள் தங்கி ஆராய்ச்சி நடத்துவதற்காக உயரே விண்வெளி நிலையம் அனுப்பப்படுவது இது முதல் தடவை அல்ல. 1971 ஆம் ஆண்டில் முதன் முதலாக ரஷியா (அப்போதைய சோவியத் யூனியன்) சல்யூட்(Salyut) என்னும் பெயர் கொண்ட விண்வெளி நிலையத்தை உயரே அனுப்பியது. பின்னர் பல சல்யூட் விண்கலங்கள் செலுத்தப்ப்ட்டன். இதில் ரஷிய விண்வெளி வீரர்கள் மட்டுமே தங்கிப் பணியாற்றினர்.

அமெரிக்க ஸ்கைலாப்
பின்னர் அமெரிக்கா ஸ்கைலாப் (Skylab) என்னும் பெயர் கொண்ட விண்வெளி நிலையத்தை உயரே அனுப்பியது. அது 1973 முதல் 1979 வரை செயல்பட்டது. அதில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் மட்டுமே தங்கி செயல்பட்டனர். அதன் பிறகு ரஷியாவின் மிர் (Mir) விண்கலம் 1986 ஆம் ஆண்டிலிருந்து 14 ஆண்டுக்காலம் செயல்பட்டது. அதுவரை உயரே அனுப்பப்பட்ட விண்வெளி நிலையங்களில் மிர் தான் பெரியது. ஆனால் இப்போது செயல்படும் சர்வதேச விண்வெளி நிலையம் தான் வடிவிலும் சரி, எடை அளவிலும் சரி மிகப் பெரியது.

ரஷிய மிர் விண்வெளி நிலையம்
இப்போது சீனா தனக்கென தனியே ஒரு விண்வெளி நிலையத்தை ஏற்படுத்திக் கொள்வதில் முனைந்துள்ளது. 2011 செப்டம்பர் கடைசியில் சீனா வானுலக மாளிகை என்னும் பெயர் கொண்ட ஆளில்லா விண்கலத்தை உயரே அனுப்பியது. இப்போது அது பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. சீனா பின்னர் நவம்பரில் ஒரு சிறிய விண்கலத்தை அனுப்ப, அது உயரே சென்று வானுலக மாளிகை விண்கலத்துடன் இணைந்து கொண்டது. மேலும் சில இணைப்புக் கலங்களை அனுப்பிய பின்னர் வானுலக மாளிகையில் தங்கி பணி புரிய சீன விண்வெளி வீரர்கள் அனுப்பப்படலாம். உயரே விண்வெளி நிலையத்தை நிறுவும் திட்டம் எதுவும் இந்தியாவிடம் இல்லை.

செவ்வாயிலிருந்து வந்து விழுந்த கல்

வானிலிருந்து ஒரு கல் வந்து விழுகிறது. அது செவ்வாய் கிரகத்திலிருந்து வந்து விழுந்த கல் தானா என்று கண்டுபிடிக்க வழி இருக்கிறது.

இந்த விண்கல்லுக்குள் மிக நுண்ணிய கண்ணாடி உருண்டை மாதிரியில் துணுக்குகள் இருக்கும். இந்த நுண்ணிய உருண்டைகளுக்குள் நுண்ணிய அளவில் வாயுக்கள் இருக்கும். மேற்கூறிய துணுக்குகளை சூடு படுத்தினால் வாயுக்கள் வெளிப்படும். மிக நுட்பமான கருவிகளை வைத்து ஆராய்ந்தால் அந்த வாயுக்களை வைத்து கல் செவ்வாயிலிருந்து வந்ததா என்பதை அறிந்து கொள்ளலாம்.

பூமியின் காற்று மண்டலத்தில் அடங்கிய வாயுக்களின் கல்வை ஒரு மாதிரியாக இருக்கும். செவ்வாய் காற்றின் வாயுக்கலவை வேறு மாதிரியாக இருக்கும். வெள்ளி கிரகத்தில் அடங்கிய காற்றின் வாயுக்கலவை இன்னொரு விதமாக இருக்கும்.

செவ்வாய் கிரகத்துக்கு இதுவரை அனுப்பப்பட்டுள்ள பல ஆளில்லா விண்கலங்கள் செவ்வாயின் காற்றை ஆராய்ந்து விரிவான தகவல்களை அனுப்பியுள்ளன. ஆகவே பூமியில் வந்து விழுந்த விண்கல்லில் அடங்கிய காற்று சாம்பிளை ஆராயும் போது அக்கல் செவ்வாயிலிருந்து வந்ததுதானா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.


கடந்த ஆண்டில் மொராக்கோவில்
 வந்து விழுந்த செவ்வாய் கல்
கடந்த ஆண்டு ஜூலையில் மொராக்கோ(Morocco) நாட்டில் வந்து விழுந்த விண்கற்கள் செவ்வாயிலிருந்து தான் வந்தவை என்பதை சில வாரங்களுக்கு முன்னர் நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விண்வெளியிலிருந்து வந்து விழும் கற்கள் விண்கற்கள் (Meteorites) என்று குறிப்பிடப்படுகின்றன. நம் கண் முன்பாக வானிலிருந்து விண்கல் வந்து விழுவது என்பது மிக அபூர்வம்.  செவ்வாய் கிரகத்திலிருந்து விண்கல் மொராக்கோவில் வந்து விழுந்த இடம் பொதுவில் ஆள் நடமாட்டம் இல்லாத இடம் என்றாலும் அது விழுந்ததை அந்த வட்டாரத்தில் இருக்க நேர்ந்த நாடோடிகள் நேரில் கண்டனர்.

அது விழுந்த போது இரவு இரண்டு மணி. அதை நேரில் கண்டவர்கள் சொன்னது “வானில் முதலில் மஞ்சள் நிறத்தில் பிரகாசமான ஒளி தெரிந்தது. பிறகு அது பச்சை நிற ஒளியாக மாறியது. அந்த வட்டாரம் முழுவதும் ஒரே வெளிச்சமாகியது. வானிலிருந்து இறங்கிய பொருள் இரண்டாக உடைந்தது. அப்போது பயங்கர இடி முழக்கம் போன்ற சத்தம் ஏற்பட்டது”.

மொராக்கோவில் விழுந்த விண்கல்லின்
ஒரு துண்டு (படம்: Laurence Garvie)
அந்த வட்டாரத்தில் விழுந்த விண்கற்களின் மொத்த எடை ஏழு கிலோ. அவற்றில் பெரியதாக இருந்த கல்லின் எடை ஒரு கிலோ. அவை ஜூலையில் வந்து விழுந்தன என்றாலும் டிசம்பரில் தான் அங்கிருந்து சேகரிக்கப்பட்டன.

விண்கற்களுக்கு விலை உண்டு. உலகில் பல செல்வந்தர்களும் நல்ல விலை கொடுத்து இவற்றை வாங்கி சேகரிக்கின்றனர். இவற்றை வாங்கி விற்கின்ற டீலர்களும் பலர் உள்ளனர். சாதாரண விண்கல்லுக்கே நல்ல விலை உண்டு.

செவ்வாயிலிருந்து வந்து விழுந்த விண்கல் என்றால் ரேட் அதிகம். தங்கம் போல, இவை ஒரு கிராம் இவ்வளவு டாலர் என்ற விலையில் விற்கப்படுகின்றன. செவ்வாயிலிருந்து மொராக்கோவில் வந்து விழுந்த விண்கல்லுக்கு ஒரு கிராம் 500 டாலர் முதல் 1000 டாலர் வீதம் விலை (ரூ24,500 முதல் 49,000 வரை) கொடுக்கப் பலரும் தயாராக இருந்தனர் (2012 பிப்ரவரி 11 ஆம் தேதியன்று சென்னையில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ 2629 ஆக இருந்தது).

இந்தியாவில் வந்து விழுந்த
ஷெர்கோட்டி விண்கல்
செவ்வாய் கற்களின் விலை மிக அதிகமாக இருப்பதில் வியப்பில்லை. செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு ஆகியவை பல ஆளில்லா விண்கலங்களை அனுப்பியுள்ளன என்றாலும் செவ்வாய் கிரகத்திலிருந்து இதுவரை சாம்பிளாக கற்கள் எதுவும் எடுத்து வரப்படவில்லை. செவ்வாய்க்கு இதுவரை மனிதன் சென்றதில்லை. மனிதனை அனுப்பி அங்கிருந்து கற்களை எடுத்து வருவதென்றால் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும்.

சர்வதேச விண்கல் ஆராய்ச்சி மற்றும் கிரக அறிவியல் சொசைடியைச் சேர்ந்த நிபுணர்களும், அமெரிக்க நாஸா விஞ்ஞானிகளும் மொராக்கோவில் விழுந்த விண்கற்களை ஆராய்ந்து அவை செவ்வாயிலிருந்து வந்தவையே என கடந்த மாத மத்தியில் உறுதிப்படுத்தினர். விண்கற்களுக்குப் பெயர் வைப்பது வழக்கம். அதன்படி மொராக்கோவில் விழுந்த கற்களுக்கு Tissint என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அண்டார்டிகாவில் கண்டுபிடிக்கப்பட்ட
செவ்வாய் கல் ALH  84001
அமெரிக்காவில் குறைந்தபட்சம் நான்கு பல்கலைக்கழகங்கள் மொராக்கோவில் விழுந்த கற்களின் சாம்பிள்களைப் பெற்றுள்ளன. நிபுணர்கள் இக்கற்களை விரிவாக ஆராய்வர்.

இதற்கு முன்னர் 1962 ஆம் ஆண்டில் நைஜீரியாவில் செவ்வாய்க் கல் வந்து விழுந்தது. இந்தியாவில் பிகார் மானிலத்தில் உள்ள ஷெர்கோட்டி என்னுமிடத்தில் 1865 ஆம் ஆண்டில் இதே போல செவ்வாய்க் கல் வந்து விழுந்தது. அதன் எடை 5 கிலோ. அதற்கு ஷெர்கோட்டி கல் என்று பெயர் வைத்தனர். 1984 ஆம் ஆண்டில் அண்டார்டிகாவில் செவ்வாய் கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பெயர் ALH 84001.

நமக்குத் தெரிந்து செவ்வாயிலிருந்து கல் ஒன்று பூமியில் வந்து விழுவது ஐந்தாவது தடவையாகும்.

செவ்வாயிலிருந்து கற்கள் பூமியில் எவ்விதம் வந்து விழுகின்றன என்று கேட்கலாம். செவ்வாயின் தரையிலிருந்து கற்கள் எதுவும் இறக்கை முளைத்துக் கிளம்பி விடுவதில்லை. பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் விண்வெளியிலிருந்து பெரிய விண்கல் ஒன்று அல்லது பல கற்கள் செவ்வாயின் தரையில் பயங்கர வேகத்தில் மோதியிருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

இப்படியான மோதலின் போது செவ்வாயின் தரையில் பாறைகள் தூள் தூளாகி உயரே தூக்கயடிக்கப்பட்டிருக்க வேண்டும்.  செவவாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியிலிருந்தே விடுபடக்கூடிய அளவுக்கு இவை அதி வேகத்தில் உயரே தூக்கியடிக்கப்பட்டால் அக்கற்கள் விண்வெளியில் பல கோடி காலம் சஞ்சரித்து உகந்த சூழ்நிலைகளில் பூமியில் வந்து விழுகின்றன. உதாரணமாக ஷெர்கோட்டி செவ்வாய்க் கல் செவவாய் கிரகத்திலிருந்து சுமார் 17 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் கிளம்பியிருக்க வேண்டும் என்று ஒரு மதிப்பீடு கூறுகிறது.

மொராக்கோவில் விழுந்த செவ்வாய்க் கல்லின் ஒரு கிலோ சாம்பிள் லண்டன் இயற்கை வரலாற்று மியூசியத்துக்கு பெயர் தெரிவிக்க விரும்பாத அன்பர் ஒருவர் அன்பளிப்பாக அண்மையில் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மியூசியத்தின் நிபுணர்கள் இக்கல்லை விரிவாக ஆராய உள்ளனர்.

விண்வெளியில் உள்ள ’பறக்கும் மலைகள் ‘ யாருக்குச் சொந்தம்?

பூமியும் சந்திரனும் இருக்கின்ற வட்டாரத்தை நோக்கி ‘பறக்கும் மலைகள்’ என்று சொல்லத்தக்க பெரும் பாறைகள் அவ்வப்போது ‘சர், சர்’ என்று வேகமாக வரும். ஆனால் அவை பூமியின் மீது அல்லது சந்திரன் மீது மோதாமல் தமது சுற்றுப் பாதையில் வேகமாகச் சென்று விடும். இவற்றுக்கு   ‘ஆபத்தை உணடாக்கக்கூடிய் அஸ்டிராய்டுகள்’ என்று பெயர். உதாரணமாக மே 19 ஆம் தேதியன்று 31 மீட்டர் நீளம் கொண்ட அஸ்டிராய்ட் சுமார் 9 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் பூமியைக் கடந்து செல்ல இருக்கிறது.

இந்த ஆண்டு ஏப்ரல் கடைசியிலான நிலவரப்படி இப்படியான அஸ்டிராய்டுகள் மொத்தம் 1287 உள்ளன. இந்த அஸ்டிராய்டுகள் காலம் காலமாக வந்து போய்க் கொண்டிருக்கின்றன. பூமியுடன் மோத வாய்ப்பில்லை தான். ஆனாலும் அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸா பல்வேறு வழிகளில் இவற்றைக் கண்காணித்து வருகிறது.


அஸ்டிராய்ட் ஐடா
நாம் இந்த அஸ்டிராய்டுகள் குறித்து கவலைப்படுவதற்குப் பதில் இந்த அஸ்டிராய்டுகள் இனி மனிதனைக் கண்டு பயப்படலாம் .காரணம். அமெரிக்காவின் கோடீஸ்வர முதலாளிகள் இந்த அஸ்டிராய்டுகள் மீது கண் வைத்து விட்டனர்.

அஸ்டிராய்டுகளிலிருந்து பிளாட்டினம், தங்கம் போன்ற அரிய உலோகங்களை வெட்டி எடுத்து வரும் நோக்கில் இப்போது அமெரிக்காவில் தனி கம்பெனி அமைக்கப்பட்டுள்ளது. பிரபல ஹாலிவுட் படத் தயாரிப்பாளரும் கோடீஸ்வரருமான ஜேம்ஸ் கேமரான், கூகுள் நிறுவனர் லாரி பேஜ், கூகுள் சேர்மன் எரிக் ஷ்மிட் முதலானோர் முதலீடு செய்து Planetary Resources  என்னும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.

அஸ்டிராய்டுகளில் நிறைய உலோகம் அடங்கிய அஸ்டிராய்ட், பெரிதும் பாறையால் ஆன அஸ்டிராய்ட் என பல வகைகள் உண்டு. பெரிதும் உலோகத்தால் ஆன அஸ்டிராய்டில் பிளாட்டினம், தங்கம் போன்ற விலையுயர்ந்த உலோகங்கள் அடங்கியிருக்கும்.

பிளாட்டினமும் தங்கமும் நிறைய உள்ளதாகக்
கூறப்படும் அஸ்டிராய்ட் 3554 அமுன்
இரண்டு கிலோ மீட்டர் குறுக்களவு கொண்ட 3554 அமுன் எனப்படும் அஸ்டிராய்டில் இரும்பு மற்றும் நிக்கல் உலோகங்கள் 8 லட்சம் கோடி டாலர் மதிப்புக்கு உள்ளன. கோபால்ட் எனப்படும் உலோகம் 6 லட்சம் கோடி டாலர். பிளாட்டினம், தங்கம் ஆகிய உலோகங்களின் மதிப்பு மேலும் 6 லட்சம் கோடி டாலர் என்று ஜான் லூயிஸ் என்ற நிபுணர் கூறுகிறார்.

இந்த அமெரிக்க நிறுவனத்தினர் அஸ்டிராய்டுகளிலிருந்து தண்ணீரையும் பெறுவதற்குத் திட்டமிட்டுள்ளனர். இத்தண்ணீரிலிருந்து ஆக்சிஜனையும் ஹைட்ரஜனையும் தனித்தனியே பிரித்து அவற்றைத் திரவமாக்கி விண்வெளியிலிலேயே பெரிய டாங்கிகளில் சேமித்து வைக்கவும் திட்டம் உள்ளது. உயரே செல்கின்ற ராக்கெட்டுகளுக்கு அவற்றை எரிபொருட்களாக விலைக்கு விற்க முடியும்.

அஸ்டிராய்டுகளிலிருந்து உலோகங்களை எடுப்பது என்பது ஏதோ புதிதாகத் தோன்றிய கருத்து அல்ல. விண்வெளி ராக்கெட் இயலின் தந்தை என்று வர்ணிக்கப்படும் ரஷிய மேதை கான்ஸ்டாண்டின் சியோல்கோவ்ஸ்கி 1903 ஆம் ஆண்டிலேயே இது பற்றிய கருத்தை வெளியிட்டார்.

சூரிய குடும்பத்தில் அஸ்டிராய்ட் மண்டலம்
சூரிய மண்டலத்தில் அஸ்டிராய்டுகள் தனி வகை. செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதைக்கும் வியாழன் கிரகத்தின் சுற்றுப்பாதைக்கும் இடையே அஸ்டிராய்ட் மண்டலம் உள்ளது. அங்கு லட்சோப லட்சம் அஸ்டிராய்டுகள் உள்ளன. குடியரசு தின விழாவில் அணிவகுத்துச் செல்லும் ராணுவ வீரர்கள் போல இவை அனைத்தும் ஓர் ஒழுங்குடன் அணிவகுத்துச் செல்பவையாக சூரியனைச் சுற்றுகின்றன.

இந்த அஸ்டிராய்ட் மணடலத்திலிருந்து பல ஆயிரம் அஸ்டிராய்டுகள் தனியே கிளம்பி பூமிக்கு அருகே வந்து செல்கின்றன. இவ்விதமான அஸ்டிராய்டுகள் மீது தான் குறிப்பாக கவனம் செலுத்தப்படும்.

விண்வெளித் துறையில் இன்று எவ்வளவோ முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சந்திரனுக்குச் சென்று வருவதை விட அஸ்டிராய்டுக்குச் சென்று வருவது சுலபமானதே. சந்திரனுக்கும் அத்துடன் கிரகங்களுக்கும் ஈர்ப்பு சக்தி உண்டு. ஆகவே அவற்றில் போய் இறங்கினால் ஈர்ப்பு சக்தி காரணமாக அங்கிருந்து எளிதில் உயரே கிளம்ப முடியாது. ராக்கெட் உயரே கிளம்புவதற்கு நிறைய எரிபொருள் தேவைப்படும். அவற்றுடன் ஒப்பிட்டால் அஸ்டிராய்டுகளில் போய் இறங்குவதும் அங்கிருந்து கிளம்புவதும் எளிது. வடிவில் அவை சிறியவை என்பதால் அஸ்டிராய்டுகளின் ஈர்ப்பு ச்கதி மிகக் குறைவாக இருக்கும். ராக்கெட் உயரே கிளம்புவதற்கு கொஞ்சம் எரிபொருள் இருந்தாலும் போதும்.

நாஸா அனுப்பிய டான் (Dawn) என்னும் செயற்கைக்கோள் பூமியிலிருந்து சுமார் 18 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெஸ்டா என்னும் அஸ்டிராய்டை அடைந்து அதைச் சுற்றி வருகிறது.

அஸ்டிராய்ட் வெஸ்டா 
பூமியில் பல நூறு டன் எடை கொண்ட ஒரு பொருளின் எடை அஸ்டிராய்ட் ஒன்றில் மிக அற்ப அளவில் இருக்கும். ஆகவே அங்கிருந்து அரிய உலோகங்கள் அடங்கிய பாறையை எடுத்துக் கொண்டு உய்ரே கிளம்புவது எளிது. சொல்லப் போனால் அவற்றை பூமியில் கொண்டு வந்து இறக்குவது தான் மிகக் கடினமான வேலையாக இருக்கும்.

இத்திட்டத்தை மேற்கொள்வோர் முதலில் தகுந்த அஸ்டிராய்டுகளைத் தேர்ந்தெடுக்க பூமிக்கு மேலே பல டெலஸ்கோப்புகளைப் பறக்க விடுவர். இது இரண்டு ஆண்டுகளில் சாத்தியமாகி விடும் என்று கருதப்படுகிறது. அடுத்த கட்டப் பணி அஸ்டிராய்டுகளுக்கு அனுப்புவதற்காகத் தானியங்கி ரோபாட்டுகளை உருவாக்குவதாகும். மூன்றாவது கட்டத்தில் தான் அஸ்டிராய்டுகளில் ரோபாட்டுகளை இறக்கி அரிய உலோகங்கள் அடங்கிய பாறைகள் வெட்டி எடுக்கப்படும்.

புதிய நிறுவனம் ஏற்கெனவே 25 எஞ்சினியர்களை வேலைக்கு அமர்த்திக்கொண்டுள்ளது. இவர்களில் பலர் முன்னர் அமெரிக்க நாஸா அமைப்பில் வேலை பார்த்தவர்கள்.

எடுத்த எடுப்பில் இவர்கள் ஒரு முக்கிய பிரச்சினையை சமாளிக்க வேண்டியிருக்கும். சந்திரன், கிரகங்கள், விண்வெளி பற்றி 1967 ஆம் ஆண்டில் சர்வதேச சட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி எந்த நாடும் விண்வெளியில் உள்ள சந்திரன் மற்றும் கிரகங்கள் மீது உரிமை கொண்டாட முடியாது. இதில் அஸ்டிராய்டுகளும் அடங்கும். சர்வதேச சட்டத்தில் அரசுகள் பற்றித் தான் கூறப்பட்டுள்ளதே தவிர, தனியார் கம்பெனிகள் பற்றி எதுவும் கூறப்படவில்லை என்று வாதிக்கப்படுகிறது.

அஸ்டிராய்டுகளிலிருந்து பிளாட்டினம், தங்கம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த உலோகங்களை எடுத்து வருவது என்பது நல்ல திட்டம் தான். ஆனால் இப்படி அஸ்டிராய்டுகளிலிருந்து ஏராளமான அளவில் பிளாட்டினம், தங்கம் ஆகியவை பூமிக்கு வரும் போது உலக மார்க்கெட்டில் இவற்றின் விலை ஒரேயடியாகச் சரிந்து போக வாய்ப்புள்ளது.உதாரணமாக தங்கத்தின் (ஒரு பவுன்) விலை ரூ 20 ஆயிரத்திலிருந்து ஒரு பவுன் ரூ 2000 ஆகக் குறைந்து போனால் என்ன ஆகும்? பெண்ணைப் பெற்றவர்கள் ரொம்ப சந்தோஷப்படுவார்கள்.

கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் என்பது என்ன?

ராக்கெட்டும் ஒரு வாகனமே. அது செயற்கைக்கோளை சுமந்து உயரே கொண்டு சேர்க்கிறது. ஆகவே செயறகைக்கோளைச் செலுத்தும் ராக்கெட்டுகளுக்கு “செயறகைக்கோள் செலுத்து வாகனம்” (Satellite Launch Vehicle) என்ற பொதுப் பெயர் உண்டு. ராக்கெட்டுக்குள் வைக்கப்படுகின்ற எரிபொருள் பயங்கர வேகத்தில் பின்புறம் வழியே தீப்பிழமபை பீச்சிடுவதால் முன் நோக்கி அதாவது உயரே பாய்கிறது.


ஒரு ராக்கெட் உயரே கிளம்புகிறது
எந்த எரிபொருளானாலும் அது எரிவதற்கு ஆக்சிஜன் தேவை. கார், லாரி போன்று தரையில் செல்கின்ற வாகனங்களுக்கும் சரி, வானில் செல்லும் விமானங்களுக்கும் சரி, காற்று மண்டலத்திலிருந்து ஆக்சிஜன் இயற்கையாகக் கிடைக்கிறது.

ஆனால் ராக்கெட்டானது மிக உயரே செல்வதாகும். அந்த உயரத்தில் காற்று (ஆக்சிஜன்) அனேகமாக இராது. ஆகவே ராக்கெட்டில் உள்ள எரிபொருள் எரிவதற்கு உதவக்கூடிய ஆக்சிஜன் அடங்கிய பொருளையும் சேர்த்து ராக்கெட்டில் வைக்க வேண்டியுள்ளது. பல வேதியல் பொருட்கள் இவ்விதம் ஆக்சிஜனை அளிக்கக்கூடியவை.

செயற்கைக்கோளைச் செலுத்துகின்ற ராக்கெட்டில் ஆக்சிஜனும் அடங்கிய திட எரிபொருளை மட்டும் வைக்கலாம். அல்லது திரவ எரிபொருளையும் அது எரிவதற்கு உதவும் ஆக்சிஜன் அடங்கிய பொருளையும் வைக்கலாம்.

நீல நிறத்தில் இருப்பது திரவ ஹைட்ரஜன் டாங்க்.
சிவப்பு நிறத்தில் உள்ளது திரவ ஆக்சிஜன் டாங்க்.
ஹைட்ரஜன் வாயுவையும் ஆக்சிஜன் வாயுவையும் பயன்படுத்துகின்ற ராக்கெட்டாக இருந்தால் அது அதிக உந்து விசையை அளிக்கும். ஆகவே அதிக எடை கொண்ட செயறகைக்கோளை சுமந்து செல்ல முடியும். ஆனால் ராக்கெட்டில் தனித்தனி டாங்கிகளில் ஹைடரஜன் வாயுவையும் ஆக்சிஜன் வாயுவையும் எடுத்துச் செல்வதானால் பெரிய பெரிய டாங்கிகள் தேவைப்படும். அப்படியான டாங்கிகளைக் கொண்ட ராக்கெட்டை உயரே கிளம்பச் செய்வதே கடினம்.

எனினும் ஹைடரஜன வாயுவை மைனஸ் 253 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குளிர்வித்தால் அது திரவமாகி விடும். அதே போல ஆக்சிஜன் வாயுவை மைனஸ் 184 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குளிர்வித்தால் அதுவும் திரவமாகி விடும். ராக்கெட்டின் முன்புறத்தில் தனித்தனி டாங்கிகளில் இந்த திரவங்களை சேமித்து வைக்க முடியும். ராக்கெட் உயரே செல்கையில் இந்த இரண்டும் ராக்கெட்டின் கீழ்ப்புறமுள்ள எஞ்சின் அறையில் வாயுவாக மாறி ஒன்று சேர்ந்து எரிந்து நல்ல உந்து விசையை அளிக்கும்.

கடும் குளிர் நிலையில் உள்ள திரவங்களைப் பயன்படுத்தும் துறைக்கு கிரையோஜெனிக்ஸ் (Cryogenics) என்று பெயர். இது கிரேக்க மொழிச் சொல். எனவே இவ்விதமான குளிர் நிலை திரவங்களைப் பயன்படுத்தும் ராக்கெட் எஞ்சினுக்கு கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் என்று பெயர். திரவ ஹைட்ரஜன், திரவ ஆக்சிஜன் ஆகியவற்றை கிரையோஜெனிக் எரிபொருட்கள் என்றும் கூறலாம்.

கிரையோஜெனிக் ராக்கெட்
எஞ்சின் சோதிக்கப்படுகிறது
கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சினை உருவாக்குவதில் பல சிக்கல்கள் உள்ளன. முதல் பிரச்சினை உலோகவியல் தொடர்பானது. கடும் குளிர் நிலையில் உலோகங்கள் விசித்திரமாகச் செயல்படும்.உலோகங்கள் எளிதில் உடையும். மெழுகு போலவும் ஆகிவிடலாம். ஆகவே ராக்கெட்டில் திரவ ஆக்சிஜன், திரவ ஹைட்ரஜன் ஆகியவற்றை சேமித்து வைப்பதற்கான டாங்கிகள் விசேஷ கலப்பு உலோகத்தால் ஆனவையாக இருக்க வேண்டும். இந்த டாங்கிகளிலிருந்து எஞ்சின் பகுதிக்கு வந்து சேருவதற்கான குழாய்கள் , பம்புகள் போன்றவையும் விசேஷ உலோகத்தால் ஆனவையாக இருக்க வேண்டும்.

டாங்கிகளிலிருந்து இந்த இரு திரவங்களும் எஞ்சின் பகுதிக்கு குறிப்பிட்ட விகிதத்தில் வந்து சேர வேண்டும்.

கடும் குளிர் நிலை ஒரு பிரச்சினை என்றால் கடும் வெப்பமும் ஒரு பிரச்சினையே. எஞ்சின் பகுதியில் இந்த இரு திரவங்களும் வாயுவாக மாறி சேர்ந்து எரியும் போது பயங்கர வெப்பம் தோன்றும். எஞ்சின் பகுதி என்பது கவிழ்த்து வைக்கப்பட்ட அண்டா மாதிரியிலானது. கடும் வெப்பத்தில் இது உருகி விடக்கூடாது. ஆகவே கடும் குளிர் நிலையில் உள்ள திரவங்கள் இந்த அண்டாவைச் சுற்றிலும் பாய்ந்து செல்கின்ற ஏற்பாடும் இருக்க வேண்டும். அப்போது தான் எஞ்சின் பகுதி உருகி விடாமல் இருக்கும். இப்படியாகப் பல பிரச்சினைகள் உள்ள்ன.

சியோல்கோவ்ஸ்கி
திரவ ஆக்சிஜனையும் திரவ ஹைட்ரஜனையும் பயன்படுத்தி ராக்கெட்டை செலுத்த இயலும் என 1903 ஆம் ஆண்டிலேயே ரஷிய மேதை சியோல்கோவ்ஸ்கி கூறினார் என்றாலும் இப்படியான ராக்கெட் எஞ்சினை உருவாக்குவதில் இருந்த எண்ணற்ற் பிரச்சினைகளால் அது சாத்தியமாவதற்குப் பல ஆண்டுகள் பிடித்தன.


அமெரிக்காவில் பிரபல ராக்கெட் நிபுணர் கொடார்ட் திரவ ஆக்சிஜனையும் பெட்ரோலையும் பயன்படுத்தும் மிகச் சிறிய ராக்கெட்டை 1926 ஆம் ஆண்டில் பரிசோதித்து வெற்றி கண்டார்.



உயரே இருப்பது தான் ராக்கெட்.
அதன் அருகே கொடார்ட்
எனினும் பின்னர் ஜெர்மனியில் பான் பிரான் என்னும் ராக்கெட் மேதை பல ஆண்டுக் காலம் பெரும் பாடுபட்டு 1942 அக்டோபரில் திரவ ஆக்சிஜனையும் ஆல்கஹாலையும் (சாராயம் என்றும் சொல்லலாம்) பயன்படுத்துகிற நவீன ராக்கெட்டை உருவாக்கினார். பறக்கும் குண்டு என்று சொல்லத்தக்க அந்த V2 ராக்கெட்டை ஹிட்லரின் படைகள் பிரிட்டன் உட்பட பல நாடுகளுக்கு எதிராகப் பயன்படுத்தின. ஹிட்லரின் அந்த ராக்கெட்டுகள் உலகை நடுங்க வைத்தன.

ஜெர்மனி உருவாக்கிய V 2 ராக்கெட்
பான் பிரான்
(Wernher von Braun)
இரண்டாம் உலகப் போர் முடிந்த உடனேயே அமெரிக்காவும் ரஷியாவும் போட்டி போட்டுக் கொண்டு ஜெர்மனியில் மீதம் இருந்த பல நூறு V2 ராக்கெட்டுகளை அள்ளிச் சென்றன. ஜெர்மன் ராக்கெட் நிபுணர்களையும் பிடித்துச் சென்றன. பான் பிரான் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டார். அமெரிக்காவும் ரஷியாவும் V2 ராக்கெட்டுகளை அடிபபடையாக வைத்து பல ராக்கெட்டுகளை உருவாக்கின.

பின்னர் அமெரிக்காவின் குடிமகனாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பான் பிரான் சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப உதவிய சாடர்ன்-5 என்னும் பிரம்மாண்டமான ராக்கெட்டை உருவாக்கி உலகப் புகழ் பெற்றார்.

அமெரிக்காவின் சாடர்ன்-5 ராக்கெட்
எல்லா ராக்கெட்டுகளிலும் திரவ ஆக்சிஜனும், திரவ ஹைட்ரனும் பயன்படுத்தப்படுவதில்லை. பல ராக்கெட்டுகளில் திட எரிபொருளும் அத்துடன் கடும் குளிர்விப்பு தேவைப்படாத திரவ எரிபொருளும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவ்வித ராக்கெட்டுகளால் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை சுமந்து செல்ல இயலாது.

அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை ராக்கெட் சுமந்து செல்ல வேண்டுமானால் கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் தேவை. ஏற்கெனவே குறிப்பிட்டபடி இவ்வகை எஞ்சின் அதிக உந்து விசையை அளிப்பதாகும்

ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஏரியான் 5 ராக்கெட்டானது அனாயாசமாக எட்டு டன் எடை கொண்ட செயற்கைக்கோளை சுமந்து செல்கிறது. அது திரவ ஆக்சிஜனையும் திரவ ஹைட்ரஜனையும் பயன்படுத்துகிறது.

ஐரோப்பிய விண்வெளி அமைப்பின்
ஏரியான் 5 ராக்கெட்
உலகில் இன்று அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் கிரையோஜெனிக் ராக்கெட்டுகளைத் தயாரிக்கும் திறன் பெற்றவையாக விளங்குகின்றன.ஆகவே இந்த நாடுகளால் எடை மிக்க செயற்கைக்கோள்களை உயரே செலுத்த முடிகிறது. ஆனால் இந்தியா இன்னும் அத்திறனைப் பெறவில்லை.

இந்தியா இத்தொழில் நுட்பத்தைப் பெற்றுவிடாதபடி அமெரிக்கா ஆரம்ப முதலே முட்டுக்கட்டை போட்டது. ஒரு கட்டத்தில் ரஷியாவும் இதற்கு உடந்தையாக இருக்க நேரிட்டது. இந்தியா பெரும் பாடுபட்டு சொந்தமாக கிரையோஜெனிக் ராக்கெட்டைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் ஓரளவு வெற்றி கண்டுள்ளது.

தூக்கியெறியப்பட்ட கிரகத்துக்கு இன்னொரு சந்திரன்

சில ஆண்டுகளுக்கு முன் அச்சிடப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் பாடப் புத்தகத்தைப் புரட்டினால் சூரிய மண்டலத்தில் மொத்தம் ஒன்பது கிரகங்கள் உள்ளன என்று காணப்படும். ஆனால் இந்த ஒன்பது கிரகங்களில் ஒன்றான புளூட்டோ ( Pluto) என்ற கிரகத்தை ’ அது கிரகமே அல்ல’ என்று கூறி வானவியல் விஞ்ஞானிகள் கடந்த 2006 ஆம் ஆண்டில் தூக்கி எறிந்து விட்டார்கள்.

ஆனால் அமெரிக்காவில் இல்லினாய் மாகாண அரசு புளூட்டோவை இன்னமும் ஒரு கிரகமாகக் கருதுகிறது. அந்த மானிலம் ஆண்டுதோறும் மார்ச் 13 ஆம் தேதியை புளூட்டோ தினமாகக் கொண்டாடுகிறது. காரணம் புளூட்டோ கிரகத்தைக் கண்டுபிடித்த கிளைட் டாம்போ அந்த மானிலத்தைச் சேர்ந்தவர். புளூட்டோ 1930 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.


இதே போல நியூ மெக்சிகோ மாகாணமும் புளூட்டோ தொடர்ந்து ஒரு கிரகமாக இருந்து வருவதாகக் கருதுகிறது.ஏனெனில் புளூட்டோவைக் கண்டுபிடிப்பதற்கு டாம்போவுக்கு உதவிய வான் ஆராய்ச்சிக்கூடம் அந்த மாகாணத்தில் தான் உள்ளது. ஆகவே நியூ மெக்சிகோ மாகாண சட்டமன்றம் 2007 ஆம் ஆண்டில் புளூட்டோ ஒரு . கிரகம் தான் என்று அறிவித்து சட்டம் நிறைவேற்றியது. இதெல்லாம் பழங்கதை.

இப்போது புளூட்டோ பற்றிய புதிய செய்தி உண்டு.  புளூட்டோ கிரகத்துக்கு ஐந்தாவது சந்திரன் உள்ளதாகக் கண்டுபிடித்துள்ளனர். பூமிக்கே ஒரு சந்திரன் தான் உள்ளது. நமது சந்திரனை விடச் சிறியதான் புளூட்டோ ஐந்து சந்திரன்களைப் பெற்றுள்ளது என்பது வியக்கத் தக்க ஒன்றாகும்.
புளூட்டோ ம்ற்றும் அதன் சந்திரன்கள்
புளூட்டோவின் ஐந்து சந்திரன்களில் சாரோன்,1978 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. நிக்ஸ், ஹைட்ரா ஆகியவை 2005 ஆம் ஆண்டிலும் P4 எனப்படும் சந்திரன் 2011 ஆம் ஆண்டிலும் கண்டுபிடிக்கப்பட்டன. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சந்திரனின் பெயர் P 5 ஆகும். சாரோன் தவிர, மற்ற நான்கும் வானில் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும் ஹப்புள் டெலஸ்கோப் மூலம் கண்டுபிடிக்கப்பட்டன.. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சந்திரனின் குறுக்களவு சுமார் 24 கிலோ மீட்டராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

முதலில் புளூட்டோ எங்கே இருக்கிறது என்று பார்ப்போம். புளூட்டோவுக்கு அப்பால் கிரகம் கிடையாது என்று சொல்கின்ற அளவுக்கு அது சூரிய மண்டல எல்லையில் உள்ளது. பூமியிலிருந்து புளூட்டோ குறைந்தது 430 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. புளூட்டோ அவ்வளவு தொலைவில் உள்ளதால் அது சூரியனை ஒரு தடவை சுற்றி முடிக்க 248 ஆண்டுகள் ஆகின்றன.
 நியூஹொரைசன்ஸ் விண்கலம் எவ்வளவு தூரம் சென்றுள்ளது என்பதைக் காட்டும் வரைபடம். புளூட்டோ சூரிய மண்டல எல்லையில் இருப்பதைக் கவனிக்கவும்.
சூரிய மண்டலத்தில் புளூட்டோ நீங்கலாக எல்லா கிரகங்களுக்கும் ஆளில்லா விண்கலங்கள் அனுப்பப்பட்டு அவை விரிவாக ஆராயப்பட்டுள்ளன. ஆகவே தான் அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸா புளூட்டோவை நெருங்கி ஆராய்ந்து படங்களைப் பிடிப்பதற்காக நியூ ஹொரைசன்ஸ் (New Horizons) என்ற ஆளில்லா விண்கலத்தை 2006 ஜனவரில் செலுத்தியது.

அமெரிக்க விண்வெளிக் கேந்திரத்திலிருந்து மணிக்கு 58 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்தப்பட்ட அந்த விண்கலம்.  இதுவரை பாதிக்கும் அதிகமான தூரத்தைத் கடந்துள்ளது.. நியூ ஹொரைசன்ஸ் 2015 ஆம் ஆண்டு ஜூலை வாக்கில் தான் புளூட்டோவை நெருங்கும். ஆனால் அது புளூட்டோவில் தரை இறங்காது.
புளூட்டோ. ஹப்புள் டெலஸ்கோப் எடுத்த ப்டம்
நியூஹொரைசன்ஸ் விண்கலம் புளூட்டோவை வேகமாகக் கடந்து செல்லும். அப்போது விண்கலத்தில் உள்ள நுட்பமான கருவிகள் புளூட்டோவை ஆராய்ந்து தகவலகளை பூமிக்கு அனுப்பும். விண்கலத்தில் உள்ள் படப்பிடிப்புக் கருவிகள். துல்லியமான படங்களைப் பிடித்து அனுப்பும். இதன் மூலம் புளூட்டோ பற்றி விஞ்ஞானிகள் மேலும் பல தகவலகளை அறிய இயலும்.

புளூட்டோவின் ஐந்தாவது சந்திரன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திரன்களில் எந்த ஒன்றின் மீதும் நியூஹொரைசன்ஸ் மோதாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.அந்த விண்கலம் புளூட்டோவை நெருங்கும் நேரத்தில் மணிக்கு 48 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதாக இருக்கும்.

பொதுவில் எந்த விண்கலத்தையும் பிரேக் போட்டு நிறுத்த முடியாது. திடீரென அதன் பாதையை மாற்ற இயலாது. வேகத்தையும் திடீரென குறைக்க இயலாது. அந்த அளவில் விஞ்ஞானிகள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஐந்தாவது சந்திரனையும் கணக்கில் கொண்டு முன்கூட்டியே நியூஹொரைசன் விண்கலத்தின் பாதையைத் தகுந்தபடி நிர்ணயிக்க வேண்டியிருக்கும். ஏனெனில் நெல்லிக்காய் அளவு உள்ள சிறிய பொருள் மோதினாலும் போதும். விண்கலத்துக்குப் பெரும் சேதம் ஏற்பட்டு விடும்.

நியூஹொரைசன்ஸ் விண்கலம் புளூட்டோவை சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலிருந்து ஆராய்வது என்று திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் ஐந்தாவது கிரகம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பாக மேலும் அதிக தொலைவிலிருந்து ஆராயும் வகையில் அதன் பாதை மாற்றப்படலாம்.

சரி, புளூட்டோ ஒரு கிரகம் அல்ல என்று சர்வதேச வானவியல் சங்கம் ஏன் தீர்ப்பளித்தது ஒரு கிரகம் என்றால் அது சில தகுதிகளைப் பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும் என்பது அச்சங்கத்தின் கருத்து.. முதலாவதாக ஒரு கிரகம் என்றால் அது சூரியனைத் தனிப்பாதையில் சுற்றி வர வேண்டும். இரண்டாவதாக அது உருண்டையாக இருக்க வேண்டும். இந்த இரு தகுதிகளையும் புளூட்டோ பூர்த்தி செய்கிறது.
புளூட்டோ எவ்வளவு சிறியது என்பதைக் காட்டும் படம்
மூன்றாவது தகுதி ஒரு கிரகம் தனது வட்டாரத்தில்,-- சுற்றுப்பாதையில் இருக்கக்கூடிய துண்டு துக்கடாக்களை தன் பால் ஈர்த்து அவற்றை கபளீகரம் செய்திருக்க வேண்டும். இந்த மூன்றாவது தகுதி புளூட்டோவுக்கு இல்லை என்பது சர்வதேச வானவியல் சங்கத்தின் கருத்து.

நீண்டகாலம் மக்களால் கிரகம் என்று கருதப்பட்ட புளூட்டோவை இப்படி திடீரென தகுதி நீக்கம் செய்வது சரியல்ல என்பது பலரின் கருத்து. தவிர, சர்வதேச வானவியல் சங்க கூட்டத்தில் புளூட்டோ பற்றி முடிவு எடுக்கப்பட்ட போது மொத்த உறுப்பினர்களில் 40ல் ஒரு பங்கு உறுப்பினர்களே இருந்ததால் அது முறையாக எடுக்கப்பட்ட முடிவு ஆகாது என்றும் வாதாடப்படுகிறது.   புளூட்டோ ஆதரவாளர்களின் இந்த வாதத்தில் நியாயம் இருப்பதாகத் தோன்றுகிறது.

சந்திரன் தோன்றியது எப்படி?

சூரியன் தோன்றியது எப்படி? தெரியும். பூமி .தோன்றியது எப்படி? தெரியும். சந்திரன் தோன்றியது எப்படி? விஞ்ஞானிகள் இக்கேள்விக்கு விடை காண இன்னமும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்போது புதிதாக ஒரு கொள்கை கூறப்பட்டுள்ளது.

புதிராக உள்ள சந்திரனின் தோற்றம்
சந்திரன் தோன்றியது எப்படி என்ற கேள்வியை வேறு விதமாகவும் கேட்க முடியும். பூமிக்கும் சந்திரனுக்கும் என்ன உறவு? சந்திரன் பூமியின் ச்கோதரனா?  அல்லது பூமியின் புதல்வனா? அல்லது பூமியின் அடிமையா?
சூரியன், பூமி, சந்திரன்
பூமியும் சந்திரனும் ஒரே சமயத்தில் சூரியனிலிருந்து . தோன்றியிருந்தால் பூமிக்கு சந்திரன் ச்கோதரன். அப்படியில்லை என்பது ஏற்கெனவே நிரூபணமாகி விட்டது. பூமியிலிருந்து சந்திரன் தோன்றியிருந்தால் சந்திரன் பூமியின் புதல்வன். அப்படியும் இல்லை என்பதை விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் காட்டுகின்றன.

மூன்றாவதாக எங்கோ இருந்து வந்து பூமியின் ஈர்ப்புப் பிடியில் சிக்கிக் கொண்டது என்றால் சந்திரன் பூமியின் அடிமை என்று சொல்லலாம். அப்படியும் இல்லை என்றாகி விட்டது.

நான்காவதாக ஒரு கொள்கை உண்டு. செவ்வாய் கிரகம் சைஸில் ஒரு கிரகம் பூமியின் மீது மோதியிருக்க வேண்டும். அந்த மோதலின் விளைவாக ஏற்பட்ட சிதறல்களே ஒன்று திரண்டு சந்திரனாக உருவெடுத்திருக்க வேண்டும்.  .பூமியின் மீது மெதுவாக வந்து மோதியதாகக் கருதப்படும் கிரகத்துக்கு விஞ்ஞானிகள் தைய்யா(Theia )  என்று பெயர் வைத்தனர். இந்த கொள்கைக்குத் தான் இப்போது ஓரளவுக்கு ஆதரவு உள்ளது.
பூமியின் மீது ஒரு கிரகம் மோதியதால் சந்திரன் உருவாகியிருக்கலாம் .என்பதை விளக்கும் படம்
ஆனாலும் பூமியின் வந்து மோதிய அக்கிரகம் எவ்வளவு பெரியதாக இருந்திருக்கும் என்பது குறித்தும் அது எந்த வேகத்தில் மோதியிருக்கும் என்பது பற்றியும் விஞ்ஞானிகளிடையே கருத்து வேற்றுமை இருந்து வருகிறது.

இப்போது சுவிட்சர்லாந்தில் பெர்ன் நகரில் உள்ள Center For Space and Habitability  என்னும் அமைப்பைச் சேர்ந்த ஆண்டிரியாஸ் ரைபர் என்ற விஞ்ஞானியும் அவரது சகாக்களும் சந்திரன் எப்படி உருவாகியிருக்கலாம் என்பது பற்றி கம்ப்யூட்டரில் பாவனையாக வெவ்வேறு நிலைமைகளை (simulations) தோற்றுவித்து ஆராய்ந்தனர்.

இவற்றை வைத்து அவர்கள் பூமியின் மோதிய கிரகம் தைய்யாவை விடப் பெரிதாக இருந்திருக்க வேண்டும் என்றும் தவிர, அது மிக வேகத்தில் வந்து மோதியிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். இவ்விதம் மோதிய கிரகம் குறைவான பொருளை மட்டும் இழந்து தன் வழியே சென்றிருக்க வேண்டும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

இந்த மோதலின் விளைவாக மிகுந்த வெப்பம் கொண்ட ஒரு வட்டு தோன்றி அதுவே பின்னர் உருண்டு திரண்டு சந்திரனாக உருவெடுத்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். மோதலின் போது தூக்கியெறியப்பட்ட பொருளில் பெரும் பகுதி பூமியிலிருந்து பிய்த்துக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
சந்திரனிலிருந்து அப்போலோ 15 விண்வெளி வீரர்கள் எடுத்து வந்த கல்
இப்படியான கொள்கைக்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் தேவை. அதாவது பூமியின் மேற்புறம் பற்றியும் பூமியில் உள்ள தனிமங்கள் அவற்றின் ஐசடோப்புகள் பற்றியும் நமக்கு நன்கு தெரியும். இந்த விஷயங்களில் பூமிக்கும் சந்திரனுக்கும் சில ஒற்றுமைகளும் சில வேற்றுமைகளும் உள்ளன.சந்திரனிலிருந்து 1969 முதல் 1972 வரை ஆறு தடவைகளில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் கொண்டுவந்த கற்கள், மண் ஆகியவை விரிவாக ஆராயப்பட்டு சந்திரன் பற்றி மேலும் தகவல்கள் அறியப்பட்டு வருகின்றன்.

எந்த விதமான முறையில் மோதல் ஏற்பட்டிருந்தால் பூமி, சந்திரன் இடையே இப்படி ஒற்றுமைகளும் அத்துடன் வேற்றுமைகளும் இருக்கும் என்று கண்டறிவதில் தான் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.இறுதியில் ஏற்கத்தக்க விடை கிடைக்க சந்திரனின் கற்கள் மேலும் விரிவாக ஆராயப்பட்டு அதே நேரத்தில் கம்ப்யூட்டரில் பாவ்னையாக மேலும் பல .மோதல்களை நடத்த வேண்டியிருக்கும் என்று கருதப்படுகிறது.இதன் மூலம் சந்திரன் எப்படித் தோன்றியது என்பதற்கு விடை காணலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்ற்னர்.