செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 6

Alien

ஏற்கெனவே சொன்னபடி லார்ட் ஆஃப் த ரிங்ஸ் தொடரை முடித்துவிட்டதால் (இடையில் ப்ராமிதியஸ் பார்த்து கடுப்பு ஆகிவிட்டதால்), இனிமேல் இந்தத் தொடரை கவனிக்கலாம் என்று இருக்கிறேன்.


அத்தியாயம் 4 – திரைப்படங்களில் ஏலியன்கள் ஏலியன்கள் என்ற விஷயமே யாருடைய கவனத்தையும் எளிதில் கவர்ந்துவிடுவதாக இருக்கிறது அல்லவா? திரைப்படத்துறைக்கு இது ஒரு ஜாக்பாட். விஷுவல் மீடியத்தில் இப்படிப்பட்ட ஏலியன்களையும் அவர்களது உலகையும் மிக எளிதில் சித்தரித்துவிடலாம் என்பது ஒரு பெரிய ப்ளஸ் பாயின்ட். திரைப்படத்துறை ஏலியன்களை கையில் எடுப்பதற்கு முன்னரே, Science Fiction என்ற ஜானரில் எப்போதோ ஏலியன்களைப் பற்றி(யும்) எழுதிவிட்டனர் எழுத்தாளர்கள். குறிப்பாக எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான H.G Wells. எனது சிறுவயதில், பைகோ க்ளாஸிக்ஸ் (Paico Classics) காமிக்ஸ் வரிசையில், தமிழில் இவரது Time Machine கதையைப் படித்த நினைவு இருக்கிறது. கால யந்திரத்தை உருவாக்கும் மனிதர் ஒருவர், மிக மிக தொலைதூர வருங்காலத்துக்குப் பயணப்பட்டு, உருவில் மிகச்சிறிய மனிதர்களை சந்திப்பார். இவரது கால யந்திரமும் களவு போய்விடும். அதே இடத்தில் இரவில், கொடிய உருவுடைய ஜந்துக்கள் கிணறுகளைப் போன்ற வடிவுடைய பாதாள வாயில்களிலிருந்து வெளிப்பட்டு இந்த குள்ள மனிதர்களை உணவுக்காக வேட்டையாடும். அப்போது ஒரு பெண்ணை இவர் காப்பாற்ற நேரும். இதன்பின் அந்தக்காலத்திலிருந்து மறுபடியும் வருங்காலம் நோக்கிப் பயணப்படுவார். அப்படிப் பயணப்படும்போது பூமியின் மெதுவான காலமாற்றம் அவருக்குத் தெரியும். இப்படியாக மறுபடியும் தனது காலத்துக்குத் திரும்பிவந்து, அங்கே இருக்கும் இவரது நபர்களிடம் இந்தக் கதையை அவர் விவரிப்பார். அவரிடம் வருங்காலத்தின் இரண்டு மலர்கள் இருக்கும். அதுவே ஆதாரம்.
இந்த காமிக்ஸ் கதை ஃப்ரேம் பை ஃப்ரேமாக நினைவிருக்கிறது. இதன்பின் பல ஆங்கில க்ளாஸிக் கதைகளை (Tom Sawyer, Prisoner of Zenda, Hound of the Baskervilles, Kidnapped, Treasure Island, Man in the Iron Mask, Count of Monte Cristo) பைகோவில் படித்திருக்கிறேன். திடீரென அந்தக் காமிக்ஸ் நின்றே விட்டது.
இந்த டைம் மெஷின் கதை, இதன்பின்னர் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. நண்பர்கள் பலர் இதன் புதிய வடிவமான ‘The Time Machine‘ திரைப்படத்தைப் பார்த்திருக்கலாம். எனக்கு இந்தத் திரைப்படம் பிடிக்கவில்லை. காமிக்ஸ் பெட்டர். கதையும்.
இந்தக் கதை வெல்ஸினால் எழுதப்பட்டது 1895ல்.
ஆனால் இதற்கு வெகுகாலம் முன்பிருந்தே Science Fiction வழக்கில் இருந்தது. நமக்கெல்லாம் நன்கு தெரிந்த எட்கர் அலன் போ, நிலவுக்கு ஒரு பலூனில் பயணப்படும் கதை ஒன்றை எழுதியிருக்கிறார் (The Unparalleled Adventure of One Hans Pfaall – 1835). இதற்கும் முன்பே Frankenstein எழுதப்பட்டுவிட்டது. மேரி ஷெல்லியால் – 1818ல். இந்த வகை எழுத்தின் ரிஷிமூலம், பதினாறாம் நூற்றாண்டு ஐரோப்பா என்று தெரிகிறது. இந்த ஏலியன் தொடரில் விரைவில் நாம் பார்க்க இருக்கும் ‘கில்காமேஷ்’ (Gilgamesh) என்ற சுமேரியன் காவியம் (BC 2150-2000)தான் உலகின் முதல் Science Fiction என்பது ஆராய்ச்சியாளர்களின் யூகம்.
இப்படி ஏலியன்களைப் பற்றி எப்போதோ புத்தகங்கள் வந்துவிட்ட நிலையில், இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்புகளில் ஒன்றான சினிமா, ஏலியன்களை விட்டுவிடுமா?
Hugo‘ படத்தின் மூலம் நமக்கு அறிமுகமான ப்ரெஞ்ச் இயக்குநர் ஜோர்ஜ் மெலியெஸ், உலகின் முதல் Space மற்றும் ஏலியன் (முதல் Science Fiction கூடத்தான்) படம் எடுத்த பெருமைக்கு சொந்தக்காரர். ஹ்யூகோ படத்தில் விவாதிக்கப்படும் A Trip to the Moon  திரைப்படத்தில், ஒரு புல்லட் வடிவ கலம், பூமியிலிருந்து பீரங்கி மூலம் செலுத்தப்பட்டு நிலவின் கண் ஒன்றில் சென்று சொருகிக்கொள்ளும். அங்கே ஏலியன்களால் தாக்கப்பட்டு, மறுபடி பூமிக்கே திரும்பி வருவார்கள் அந்த கலத்தில் இருப்பவர்கள்.
A Trip to the Moon திரைப்படத்தை இங்கே முழுதும் பார்க்கலாம்.

இந்தப்படம் வெளியான ஆண்டு – 1902. இந்தப் படத்துக்குப் பின்னர் அடுத்த ஏலியன் படமான Himmelskibet, 1918ல் வெளிவந்தது. டென்மார்க்கில்.
இதன்பின்னர் தடதடவென்று ஏலியன் படங்கள் ஹாலிவுட்டில் அப்போதைய தொழில்நுட்பங்களை வைத்து எடுக்கப்பட்டன.
ஐம்பதுகளில் எடுக்கப்பட்ட குறிப்பிடத்தகுந்த படம் ஒன்று இருக்கிறது. ‘The Day the Earth Stood Still‘ என்ற பெயர் பல திரைப்பட ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம். 2008ல் கியானு ரீவ்ஸ் நடித்து வெளிவந்த படம். இது, 1951ல் வெளிவந்த இதே பெயருடைய படத்தின் ரீமேக்தான். வேற்றுக்கிரகம் ஒன்றிலிருந்து பூமிக்கு வரும் ஏலியன் ஒன்றைப் பற்றிய கதை இது. மனிதர்கள் ஆயுதங்களைப் பெருக்கினால் பூமி அழிக்கப்படும் என்பது இந்த ஏலியன் கொண்டுவரும் செய்தி. அந்த வருடத்தின் சிறந்த படங்களில் ஒன்றாக இது அறியப்பட்டது.
இந்த இடத்தில், ஒரு பிரபலமான ஹாலிவுட் கிளிஷே பற்றிப் பார்க்கலாம். Martians என்று ஒரு வார்த்தை, கிட்டத்தட்ட பல ஹாலிவுட் படங்களில் வரும் வார்த்தை. மார்ஸ் கிரகவாசிகள் என்று பொருள். பல்வேறு நாவலாசிரியர்களால் கையாளப்பட்ட வார்த்தை இது. உதாரணத்துக்கு, நமது H.G Wells கூட அவரது War of the Worlds நாவலில் மார்ஷியன்ஸ் பற்றிக் குறிப்பிடுகிறார். சமீபத்தில் வெளிவந்த John Carter நினைவிருக்கிறதா? (ப்ராமிதியஸ் படத்துக்கு முன்னர் வெளிவந்து அரத மொக்கையாக ஆன ஏலியன் படம்). இந்தக் கதையை எழுதிய ‘டார்ஸான்’ புகழ் எட்கார் ரைஸ் பரோஸ், ஜான் கார்ட்டர் என்ற கதாநாயகன் மார்ஸ் கிரகத்துக்குப் போவதாகத்தான் எழுதியிருக்கிறார். அது என்னமோ பல எழுத்தாளர்களுக்கு மார்ஸ் கிரகத்தின் மீது ஒரு அலாதி பிரியம் போலும். தொண்ணூறுகள் வரை வெளிவந்த பல ஏலியன் படங்களில் மார்ஷியன்களை காணலாம். மார்ஸில் உயிர்களுக்கான சாத்தியக்கூறுகள் இல்லவே இல்லை என்பது பின்னாட்களில் அறுதியாக நிரூபிக்கப்பட்டபின், இப்போதெல்லாம் யாரும் மார்ஸை மையமாக வைத்து ஏலியன்களைப் பற்றி எழுதுவதில்லை.
அடுத்த படம், War of the Worlds கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அதே பெயருடைய திரைப்படம். 1953ல். இதே கதையை மறுபடியும் ஸ்பீல்பெர்க் 2005ல் படமாக எடுத்ததை அனைவருமே பார்த்திருக்கிறோம். வேற்றுக்கிரக ஜந்துக்கள், பூமியை அழிக்கும் தருணத்தில், இங்கிருக்கும் வைரஸ்களால் அவை அழிவதே கதை. வைரஸ்களுக்கும் பாக்டீரியாக்களுக்கும் அவைகளிடத்தில் மருந்து இல்லை.

War of the Worlds – 1953 – Trailer
இதன்பின் குறிப்பிடத்தகுந்த மற்றொரு ஏலியன் படம், Invasion of the Body Snatchers. 1956ல் ரிலீஸ். வேற்றுக்கிரகவாசிகளால் ரீப்ளேஸ் செய்யப்படும் மனிதர்களைப் பற்றிய படம். ஊரில் இருக்கும் ஒவ்வொருவராக மெல்ல மெல்ல மனிதத்தன்மையும் உணர்ச்சிகளும் இல்லாத ஜடங்களைப் போல் நடமாடும் மனிதர்களாக (உண்மையில் இவர்கள் ஏலியன்கள்தான்) மாற்றப்படும் கதை. இந்தக் கதையின் முடிவு அக்காலத்தில் புதுமையாக இருக்கும். அதாவது, ஏலியன்கள் அழிக்கப்படமாட்டார்கள். இந்தப்படம், மறுபடியும் 1978ல் ரீமேக் செய்யப்பட்டது. அதுவும் ஒரு ஹிட்டாகவே ஆகியது. இதன்பின் வருடாவருடம் குறைந்தபட்சம் ஐந்து ஏலியன் படங்களாவது வர ஆரம்பித்தன. 1958ல் The Blob  – ஸ்டீவ் மெக்வீனின் முதல் கதாநாயக திரைப்படம் – வெளிவந்தது.

Invasion of Body Snatchers – 1956 – Trailer
அறுபதுகளில், The Alien என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாரிக்கும் முயற்சிகள் நடந்தன. இந்திய – அமெரிக்க கூட்டுத்தயாரிப்பான இப்படம் வெளிவந்திருந்தால், இந்தப் பெயரில் முதன்முதலில் படம் எடுத்த நபராக ஒரு இந்தியர் இருந்திருப்பார். இந்தப் படம் இடையில் நிறுத்தப்பட்டு, 2006ல் தொலைக்காட்சித் திரைப்படமாக   வெளிவந்திருக்கிறது என்று அறிகிறோம்.
யார் அந்த இந்தியர்?
அதற்கு முன், இதுவரை வெளிவந்திருந்த ஏலியன் படங்களிலிருந்து இந்தப் படம் எப்படி வித்தியாசப்பட்டிருந்தது என்பது முக்கியம். இந்தப் படத்தில்தான், முதன்முதலில் நட்புணர்ச்சியோடு பூமிக்கு வந்து இறங்கும் ஏலியன் பற்றிய சித்தரிப்பு இருந்தது. அதுவரை வந்திருந்த ஏலியன் படங்களில், ஏலியன்கள் கொடூரமானவர்களாகவே காட்டப்பட்டிருந்தனர். இந்தத் திரைக்கதையைத் தயார் செய்த அந்த இந்தியருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. காரணம், அந்தத் திரைக்கதை, இன்னொருவரின் பெயரில் (இந்த இந்தியரின் அமெரிக்க மேனேஜர் – பெயர் மைக் வில்சன்) ஏற்கெனவே காப்புரிமை பெறப்பட்டிருந்தது. தனது மேனேஜரால் வஞ்சிக்கப்பட்ட அந்த இந்தியர் கோபம் கொண்டு, இப்படத்தில் பங்கேற்காமலேயே இந்தியா திரும்பினார். இந்தப் படத்தைத் தயாரிக்க இருந்தது, கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம். இப்படத்தில் மார்லன் ப்ராண்டோ நடிப்பதாக இருந்தது துணுக்குச்செய்தி.
இதன்பின் 1982ல் ஸ்பீல்பெர்க்கின் E.T திரைப்படம் வெளியானது. அப்போதுதான், தனது திரைக்கதையில் இருந்து பல பகுதிகள் அந்தப் படத்தில் அப்படியப்படியே வைக்கப்பட்டிருந்ததை அந்த இந்தியர் உணர்ந்தார். அவர் ஏற்கெனவே உலகப்புகழ் அடைந்திருந்த இயக்குநர் என்பதால், அவரது எதிர்ப்பை வலுவாகவே பதிவு செய்தார். ஆனால் ஸ்பீல்பெர்க் இதைக் கண்டுகொள்ளவில்லை. இந்த இந்தியர் மட்டுமல்ல; புகழ்பெற்ற Science Fiction எழுத்தாளர் ஆர்தர் ஸி க்ளார்க் (Arthur C Clarke) ஏற்கெனவே இந்த இயக்குநரைத் தொடர்புகொண்டு, ஸ்பீல்பெர்க்கின் திருட்டு வேலையை அம்பலப்படுத்தியிருந்தார். உண்மையில் அந்த இயக்குநரை ஆங்கிலத்தில் இந்தக் கதையைப் படமாக எடுக்கச் சொல்லியவரே ஆர்தர் ஸி க்ளார்க்தான். அவருக்கும் அந்த இந்தியரின் ஏலியன் ஸ்க்ரிப்டிலிருந்தே ET எடுக்கப்பட்டிருந்தது என்ற எண்ணம் இருந்தது.  பதிலுக்கு ஸ்பீல்பெர்க், “அவருடைய The Alien திரைக்கதை வெளிவந்தபோது நான் பள்ளி மாணவனாக இருந்தேன். எனக்கும் அதற்கும் சம்மந்தமில்லை” என்று ஒட்டுமொத்தமாக மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டார். ஆனால், உண்மையில் அந்த இந்தியரின் திரைக்கதை வெளியானபோது ஸ்பீல்பெர்க் ஆல்ரெடி திரைப்படங்கள் எடுக்க ஆரம்பித்திருந்தார். மட்டுமல்லாமல், E.T படத்துக்கு முன்னால் 1977ல் வெளிவந்திருந்த படமான ஸ்பீல்பெர்க்கின் Close Encounters of the Third Kind படத்திலும் ஓரிரண்டு காட்சிகள் இந்த இந்தியரின் திரைக்கதையிலிருந்தே வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் கிளம்பின.
ஆனால் அந்த இந்தியர் ஸ்பீல்பெர்க்கின் மேல் வழக்கு போட விரும்பவில்லை. இந்தியர்களுக்கேயுரிய அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் மனோபாவம் அவருக்கும் இருந்ததுபோலும். இந்த சச்சரவுகளை விட்டுவிட்டு, தனது திரைப்படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தினார். அழியாப் புகழை தனக்கென வைத்துவிட்டு மறைந்தும் போனார்.அவரது பெயர் – சத்யஜித் ரே.
Bankubabur Bandhu என்ற பெயரில் 1962ல் சத்யஜித் ரே எழுதிய சிறுகதையே அவரால் திரைக்கதையாக எழுதப்பட்டது.
ஹாலிவுட் என்பது எவ்வளவு பெரிய அப்பாடக்கர் என்பது ரேவுக்கு மிக தாமதமாகத்தான் தெரிய வந்தது. இந்தப்படம் மட்டும் அறுபதுகளில் வெளிவந்திருந்தால், கட்டாயம் ஒரு ஹிட்டாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை (E.T எவ்வளவு பெரிய ஹிட்டானது என்பது ரசிகர்களுக்கு மறந்திருக்காது). இதன்பின் சில வருடங்களுக்கு முன்னர் வந்த ‘Koyi Mil Gaya‘ திரைப்படம், ரேயின் கதையை வைத்தே எடுக்கப்பட்டது. அதனால்தான் E.T திரைப்படத்துக்கும் அதற்கும் பல ஒற்றுமைகள் இருந்தது. இது தெரியாமல், பல இந்தியப் பத்திரிக்கைகளே அது E.Tயின் காப்பி என்று எழுதின.
Satyajit Ray’s sketch of The Alien
இந்த விஷயம் தொடர்பான இரண்டு செய்திகளை இங்கே படிக்கலாம்
இதன்பின், 1968ல் ஆர்தர் ஸி க்ளார்க்கின் கதை ஒன்றை மையமாக வைத்து அட்டகாசமான திரைப்படம் வெளியானது. அந்தத் திரைப்படத்தில், அக்காலத்திலேயே விஷுவல் எஃபக்ட்களில் விளையாடியிருந்தார் அதன் இயக்குநர். தனது திரைவாழ்வில், ஏற்கெனவே எடுத்த ஒரு திரைப்படத்தைப் போல் அடுத்த படத்தை எடுக்காமல், ஒவ்வொரு படத்தையும் முற்றிலும் வித்தியாசமான களனில் எடுத்து (ஒவ்வொரு ஷாட்டையும் செதுக்கியிருப்பார் என்பதே சரியான விவரிப்பு), இறக்கும் வரை எவராலும் விஞ்ச முடியாமல், இறந்தபின்னும் அவரது அற்புதமான – பிரம்மாண்டமான – அட்டகாசமான படங்களின் மூலம் ஒவ்வொரு திரைப்பட ரசிகனின் மனத்திலும் நீங்காமல் நிறைந்திருக்கும் அந்த இயக்குநர் . . .அடுத்த கட்டுரையில்.
(தொடரும் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக