செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 7


Alien

விட்ட இடத்திலிருந்து தொடருவோம். இதோ இதற்கு முந்தைய கட்டுரை.
1968ல் ஆர்தர் ஸி க்ளார்க்கின் கதை ஒன்றை மையமாக வைத்து அட்டகாசமான திரைப்படம் வெளியானது. அந்தத் திரைப்படத்தில், அக்காலத்திலேயே விஷுவல் எஃபக்ட்களில் விளையாடியிருந்தார் அதன் இயக்குநர். தனது திரைவாழ்வில், ஏற்கெனவே எடுத்த ஒரு திரைப்படத்தைப் போல் அடுத்த படத்தை எடுக்காமல், ஒவ்வொரு படத்தையும் முற்றிலும் வித்தியாசமான களனில் எடுத்து (ஒவ்வொரு ஷாட்டையும் செதுக்கியிருப்பார் என்பதே சரியான விவரிப்பு), இறக்கும் வரை எவராலும் விஞ்ச முடியாமல், இறந்தபின்னும் அவரது அற்புதமான – பிரம்மாண்டமான – அட்டகாசமான படங்களின் மூலம் ஒவ்வொரு திரைப்பட ரசிகனின் மனத்திலும் நீங்காமல் நிறைந்திருக்கும் அந்த இயக்குநர் . . .
வேறு யார்? நண்பர்கள் மிகச்சரியாக யூகித்திருந்த ஸ்டான்லி க்யுப்ரிக் தான்.
ஆர்தர் ஸி க்ளார்க்கின் கதையை மையமாக வைத்து வெளியான அந்தப் படம் – 2001: A Space Odyssey. அக்காலகட்டத்தில் வெளியாகிக்கொண்டிருந்த காமெடியான ஏலியன் டைப் படங்கள் போல் இல்லாமல், மிக அழுத்தமாக ஒரு கதையைப் பதிவு செய்த ஏலியன் படம். ஸிஜி மிக ஆரம்ப கட்டத்தில் இருந்த அக்காலத்தில், அருமையான ஸ்பெஷல் எஃபக்ட்கள் இப்படத்தில் இடம்பெற்றிருந்தன. இப்படம் சந்தேகமில்லாமல் ஒரு cult classic (Cult என்ற வார்த்தையை உபயோகிக்கவே காமெடியாக இருக்கிறது. அந்த வார்த்தை நமது ‘கல்ட் பாதிவார்களிடம்’ படாத பாடு பட்டுக்கொண்டிருப்பதால்).
இந்தப் படத்தைப் பற்றி ஒரே பேராவில் எப்படி எழுதுவது? ‘மெத்த கடின’மாக இருப்பதால், இப்படத்தைப் பற்றி ஒரு கட்டுரை எழுதலாம் என்று தோன்றுகிறது. ஆனால் ஆல்ரெடி இப்படி சொல்லிவைத்துவிட்டு அது மறந்துவிட்டால் என்ன செய்வது?
இதோ 2001: A Space Odysseyயின் ட்ரைலர்.

இந்தப் படத்தில் எப்படி ஸ்பெஷல் எஃபக்ட்களை உபயோகித்தார்கள் என்பதைப் பற்றி இணையமெங்கும் கட்டுரைகள் உண்டு.  பொதுவாகவே க்யுப்ரிக் ஒரு பர்ஃபெக்‌ஷனிஸ்ட். சில சமயம் ஒரே ஒரு ஷாட்டை குறைந்தபட்சம் ஐம்பது தடவைகளாவது படமாக்குவது அவருக்கெல்லாம் சாதாரணம். அதேபோல் அவரது ஒவ்வொரு படமுமே ஒவ்வொரு வகை. நாம் இந்தத் தளத்தைத் தொடங்கிய 2009 இறுதியில் க்யுப்ரிக்கின் Dr. Strangelove or: How I Learned to Stop Worrying and Love the Bomb படத்தைப் பற்றிய விமர்சனம் பார்த்திருக்கிறோம். அந்தப் படம் வெளிவந்த 1964ம் ஆண்டுக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்தே Odyssey வெளிவந்தது. 1968ல். அத்தனை வருடங்களும், The Sentinel என்ற Arthur C Clarke சிறுகதையிலிருந்து ஒரு திரைக்கதையை க்யுப்ரிக்கும் க்ளார்க்கும் எழுதினர். இந்தத் திரைக்கதை எழுதப்படும்போது நடந்த ரசமான சம்பவங்களும் இணையமெங்கும் உண்டு. முடிந்தால் இப்படத்தைப் பற்றிய ஒரு கட்டுரையில் அவற்றையும் பார்க்கலாம்.
இந்தப் படத்தைப் பற்றி க்யுப்ரிக் சொல்லும்போது, ‘இப்படத்தின் தன்மையை வார்த்தைகளால் விளக்க இயலாது. மாறாக, இப்படத்தைப் பற்றிய கருத்து, நேரடியாக உங்களது மனதின் ஆழத்தில் சென்று உணர்ச்சிபூர்வமாகவும் தத்துவபூர்வமாகவுமான ஒரு உணர்வைத் தரக்கூடியது. இசையைப் போல. படத்தைப் பார்ப்பவர்கள், படம் தரக்கூடிய பல்வேறு விதமான அர்த்தங்களைப் பற்றி என்னவேண்டுமானாலும் விவாதிக்கலாம்’ என்றே 1968ல் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். அதேபோல, இப்படம் உண்மையிலேயே ஒரு அனுபவம்தான். இதுமட்டுமல்ல. அவரது படங்கள் ஒவ்வொன்றுமே அப்படித்தான். பிற்காலத்தில் – அதாவது இப்படத்திலிருந்து துவங்கி – க்யுப்ரிக்கின் படங்களில், இசை ஒரு முக்கிய பங்கை வகிக்க ஆரம்பித்தது. குறிப்பாக, ஸிம்ஃபனி இசை. classical இசை.  க்யுப்ரிக்குக்கு அவரது வாழ்வின் ஒரே ஆஸ்கர் – ஸ்பெஷல் எஃபக்ட்களில் – இப்படத்தினால் கிடைத்தது. ஆஸ்கர் க்யுப்ரிக்கை தொடர்ந்து ignore செய்துகொண்டே வந்தது. அது க்யுப்ரிக்கைப் போன்ற பல படைப்பாளிகளுக்கும் நடந்துவந்ததுதான். இன்னொரு உதாரணம் – ஸ்கார்ஸெஸி.
2001: A Space Odyssey என்ற க்யுப்ரிக்கின் இப்படம், ஏலியன் படங்களின் தன்மையையே மாற்றியது. இதன்பின் வரக்கூடிய பல்வேறு படங்களுக்கு ஒரு முன்னோடியாக இருந்தது. இப்படத்துக்குப் பின்னர், குறிப்பிடத்தக்க இன்னொரு படம் – The Andromeda Strain. இப்படம், இதே பெயரில் 1969ல் மைக்கேல் க்ரைட்டன், அவரது இருபத்தி ஏழாவது வயதில் எழுதிய நாவலிலிருந்து படமாக்கப்பட்டது. இதுதான் திரைப்படமாக ஆக்கப்பட்ட க்ரைட்டனின் முதல் நாவல். இதன்பின்னர் அவரால் எழுதப்பட்டு திரைவடிவம் பெற்ற நாவல்கள் பல. அவற்றில் அவரே இயக்கியவைகளும் உண்டு.
ஆண்ட்ரோமிடா ஸ்ட்ரைன், ஒரு டிபிகல் ஸைன்ஸ் ஃபிக்‌ஷன். அமெரிக்க ஸாடலைட் ஒன்றில் ஒட்டியிருக்கும் ஏலியன் கிருமி ஒன்றினால் மரணங்கள் சம்பவிக்கும் கரு.
இதோ The Andromeda Strain படத்தின் ட்ரெய்லர்.

இந்த நாவல், 2008ல் இரண்டு பாகங்கள் அடங்கிய ஒரு மினி ஸீரீஸாக ஒளிபரப்பப்பட்டது.
இதன்பின்னர் வெளிவந்த படமே Solaris. இப்படத்தை உலக சினிமா ரசிகர்கள் பலரும் நினைவு வைத்திருக்கலாம். டர்க்கோவ்ஸ்கியின் படம். இந்தப்படம் மட்டுமல்லாமல் வேறு பல ஸைன்ஸ் ஃபிக்‌ஷன் படங்களையும் பற்றி கொழந்த எழுதியுள்ள இந்தக் கட்டுரையை ஒருமுறை படித்துவிடும்படி நண்பர்களுக்குப் பரிந்துரை செய்கிறேன் —> Sci-Fi என்ற சமுத்திரம்.
இதோ Solaris படத்தின் ட்ரய்லர்.

இப்படங்களுக்குப் பிறகு, சில ஆண்டுகள் கழித்து வெளிவந்த ஒரு குறிப்பிடத்தக்க படமே ஸ்பீல்பெர்க் என்ற இளம் இயக்குநர் எடுத்த Close Encounters of the Third Kind. ஏலியன் படங்களில் இதுவும் ஒரு குறிப்பிடத்தக்க படம்தான். பூமிக்கு வந்த UFOக்களைப் பற்றிய படம். இப்படத்தில் ஒரு UFO ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்திருந்தவர் – புகழ்பெற்ற ஃப்ரெஞ்ச் இயக்குநர் ஃப்ரான்ஸ்வா ட்ரூஃபோ (François Truffaut). ஸ்பீல்பெர்க்கை உலகப்புகழுக்கு உயர்த்திய இந்தப் படத்தின் ட்ரைலர் இங்கே.

இந்தப் படம் வெளிவந்த அதே 1977ல், இன்னொரு பிரம்மாண்ட சூப்பர்ஹிட் படம் வெளிவந்தது. எப்படி தற்போதைய Lord of the Rings படங்கள் உலக மக்களிடையே மறக்கவியலாததொரு அனுபவமாக மாறியனவோ, அப்படி இந்தப் படமும் அக்காலத்தில் ஒரு காவியம். அதன் இயக்குநரும் ஒரு இளைஞரே. ஸ்பீல்பெர்க்கின் நண்பரும் கூட. இப்படங்களைப் பற்றியும், இதன்பின்னர் வெளிவந்த நவீனகால ஏலியன் படங்களைப் பற்றியும் அடுத்த கட்டுரையில் காணலாம். அத்துடன் இந்த ஏலியன் பட லிஸ்ட்டை ஏறக்கட்டிவிட்டு, உலகின் பிற ஏலியன்தனமான (???!!) விஷயங்களை மறுபடி நோக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக