வெள்ளி, 11 அக்டோபர், 2013

பேரழகியென கருதப்பட்ட கிளியோபாட்ரா:-ஒரு பார்வை


 cleopatra1எகிப்தை ஆண்ட பன்னிரண்டாம் தொலமிக்கு கிளியோபாட்ரா என்ற பெண்ணும், பதின்மூன்றாம் தொலமி, பதினான்காம் தொலமி ஆகிய மகன்களும் இருந்தனர். கிளியோபாட்ராவின் தாய் பெயர் இஸிஸ் எனக் கூறப்படுகிறது. பன்னிரண்டாம் தொலமியின் இறப்பிற்கு பின்பு பண்டைய எகிப்தின் முறைப்படி பெண் முடிசூட இயலாது. எனவே கிளியோபாட்ரா தனது சகோதரர்களை திருமணம் செய்துகொண்டார்.
அவர்களில் மூத்தவர் இவர் என்பதால் எகிப்தின் அரசியாக முடிசூட்டிக் கொண்டார். அப்பொழுது கிளியோபாட்ராவிற்கு பதினாறு வயதென்றும், அவரது சசோதரருக்கு 10 வயது எனத் தெரிகிறது. இவர் தனது தந்தை ஆட்சியிலிருந்த பொழுதே, அதிகாரத்தினை பகிர்ந்துகொண்டதாகவும் தெரிகிறது. அமைச்சர்களும், வணிகர்களும் தங்களுடைய எண்ணத்தினை நிறைவேற்றிட தொலமியை உபயோகித்து கொண்டனர். இதனால் கிளியோபாட்ராவின் அரசு பறிபோனதுடன், எகிப்தினை விட்டு விரட்டப்பட்டாள்.
சிரியாவிற்கு சென்றவள் ஜூலியஸ் சீசர் எனும் வீரன் எகிப்தை போர் செய்து வெல்ல வந்திருப்பதை அறிந்தாள். அதனால் சீசருடன் இணைந்து எகிப்தினை வெல்ல திட்டமிட்டாள். சீசருக்கும் கிளியோபாட்டராவின் கணவனுக்கும் (சகோதரர்) நடந்த சண்டையில் சீசர் கணவனை கொன்று விடுகிறார். கிளியோபாட்ராவின் அழகில் மயங்கிய சீசர் அவளை திருமணம் செய்துகொள்கிறார்.
இத்தம்பதிகளுக்கு பிறந்தவர் சிசேரியன் எனக் கூறப்படுகிறது. நெடுநாள் கழித்து ரோமாபுரிக்கு சென்ற சீசர் தனது நண்பன் புருட்ஸ் என்பவரால் கொலை செய்யப்பட்டார். அதன்பின் ரோமில் சீசரின் வாரிசுகளுக்கும், தளபதிகளுக்கும் பதவி சண்டை நடைபெற்றது. கணவர் துணையின்றி இருந்த கிளியோபாட்ரா சீசரின் படைத்தளபதியான ஆண்டனி என்பவரை சந்தித்தாள்.
அவர் கிளியோபாட்ராவின் அழகில் மயங்கி திருமணம் செய்துகொண்டார். அடுத்து தனது இரண்டு சகோதரிகளையும், மீதமிருந்த சகோதரனையும் கிளியோபட்ராவே கொன்றதாக கூறப்படுகிறது. இதனால் வாரிசு சண்டை என்ற பேச்சுக்கே இடமின்றி போனது. ஆண்டனி- கிளியோபட்ராவிற்கு இரண்டாம் கிளியோபாட்ரா செலீன், அலெக்சாண்டர் ஹெலியோஸ் என இரட்டையர்கள் பிறந்தார்கள்.
அதன்பின் தொலமி பிலடெல்பஸ் என்பவரும் பிறந்தார். சீசரின் வாரிசான ஆக்டோவியஸ் சீசர் கிளியோபட்ராவை எதிர்த்தார். எகிப்தின் ஆட்சிக்காக ஆண்டனியுடன் ஆக்டோவியஸ் சண்டை மூண்டது. இதில் ஆண்டனி கொலை செய்யப்பட்டார். ஆண்டனியின் மரணத்தினை ஏற்றுக்கொள்ள இயலாத கிளியோபட்ரா, தன்னை மகாராணி போல அலங்கரித்துக் கொண்டு விஷப் பாம்புகளை தீண்டும்படி செய்து உயிர் துறந்தாள்.jacksoncleo
கிளியோபாட்ராவின் மரணத்தினை வரலாற்று ஆசிரியர்கள் சிலர் வேறுவிதமாக கூறுகிறார்கள். கிளியோபாட்ரா உடலழகு மீது மிகுந்த கவனம் செலுத்தியவர் என்பதால், பாம்பின் விஷம் தீண்டி இறந்தால் முகம் விகாரமடையும் என்ற காரணத்திற்காக அவ்வாறு செய்திருக்க மாட்டார் என்கிறார்கள். கிளியோபாட்ரா பண்டைய எகிப்தில் வழக்கதிலிருந்த கொடிய தாவர விஷத்தினை அருந்தியே இறந்தார் என்கிறார் செபர் எனும் வரலாற்று அறிஞர். பண்டைய பாடலாசிரியர்களும் இதையே பாடல்களில் பாடியுள்ளார்கள் என்ற போதும், கிளியோபட்ரா பாம்பு தீண்டி இறந்தார் என்பதையே பல்வேறு ஓவியங்கள் விளக்குகின்றன.
கிளியோபாட்ராவை பேரரறிவு உடையவர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இவர், வானியல், ஜோதிடம் முதலிய பல கலைகளில் சிறந்து விளங்கியதாகவும், தானே ஏழுவகையான வாசனை திரவியங்களை தயாரித்ததாகவும் கருத்துண்டு. ஏழு மொழிகளை பேசவும், எழுதவும், படிக்கவும் கற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. Cleopatramu
எகிப்தினை ரோமானியர்களிடமிருந்து காப்பாற்ற அவள் தனது வாழ்வை தியாகம் செய்தவள் என்ற கருத்தும் காணப்படுகிறது. தினம் பாலில் குளிப்பவள், கண்களில் பல வண்ண மைகளால் அலங்காரம் செய்துகொள்வாள், உடல் முத்துக்களை வினிகரில் கரைத்து அருந்துவாள் என்ற கருத்தும் உண்டு. மரணம் அடைந்த நாள் ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 11 நேற்று நினைவுநாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக