புதன், 2 அக்டோபர், 2013

மனிதன் சிருஷ்டித்த ‘திரிசங்கு சொர்க்கம்’

திரிசங்கு மகாராஜாவுக்காக விசுவாமித்திர முனிவர் தமது தவ வலிமையால், சொர்க்கத்துக்கும் பூமிக்கும் இடையே தனி சொர்க்கத்தை சிருஷ்டிக்க, அது திரிசங்கு சொர்க்கம் என்று பெயர் பெற்றது என்பது புராணக் கதை. மனிதன் அவ்வாறு பூமிக்கு மேலே சிருஷ்டித்துள்ளது தான் சர்வதேச விண்வெளி நிலையம். மனிதனின் தொழில் நுட்ப வலிமை அதை சாத்தியமாக்கியது.


இரு புறங்களிலும் செங்குத்தாக உள்ள பட்டைகள் சூரிய ஒளியை  மின்சாரமாக
மாற்றுபவை. வெண்மை நிறப் பட்டைகள் வேறு வகையானவை.
அவற்றுக்கு கீழே உள்ளது தான் சர்வதேச விண்வெளி நிலையம்
இதை நிர்மாணிப்பதற்கான தொடக்க வேலைகள் 1998 ல் மேற்கொள்ளப்பட்டு, 2000 ஆம் ஆண்டில் முதல் குழுவாக ஆறு விண்வெளி வீரர்கள் அதில் குடிபுகுந்தனர். அப்போதிலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்தில் தொடர்ந்து விண்வெளி வீரர்கள் தங்கிப் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு தடவையும் மூவர் அடங்கிய குழு உயரே அனுப்பப்படுகிறது. அவர்கள் ஆறு மாத காலம் தங்கி பல ஆராய்ச்சிகளில் ஈடுபடுகின்றனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தை ஐந்து பெட்ரூம் கொண்ட வீட்டுக்குச் சமம் எனலாம். அந்த அளவுக்கு அதில் இடவசதி உள்ளது. ஆனால் ஆராய்ச்சிக் கருவிகள் நிறைய இடத்தை அடைத்துக் கொள்கின்றன. இதுவரை பல்வேறான துறைகளில் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. விண்வெளி வீரர்கள் உயரே செல்வதே பல பரிசோதனைகளை நடத்துவதற்குதான்.

அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய யூனியன், கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் சேர்ந்து தான் சர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்கியுள்ளன. எனினும் இந்த விண்வெளி நிலையத்தில் அந்தந்த நாடுகளுக்கென தனிப் பிரிவுகள் கிடையாது. அமெரிக்கப் பகுதி, ரஷியப் பகுதி என இரண்டு பகுதிகள் மட்டுமே உண்டு.

விண்வெளி நிலையத்தில் நீண்ட நாள் தங்கினால்
கால்களுக்குப் பயிற்சி தேவை
இந்த விண்வெளி நிலையம் ஒரே முயற்சியில் உருவாக்கப்பட்டதல்ல. முதல் பகுதியை ரஷியா தனது ராக்கெட் மூலம் உயரே செலுத்தியது. பின்னர் அமெரிக்க ஷட்டில் வாகனங்கள் அடுத்தடுத்து எடைமிக்க பகுதிகளை உயரே கொண்டு சென்றன. ஐரோப்பிய யூனியன், ஜப்பான் ஆகியவை பெரிய பகுதிகளை அளித்தன. கனடா நாடு ராட்சத கிரேன் ஒன்றை அளித்தது. இவை எல்லாம் விண்வெளியில் ஒன்று சேர்க்கப்பட்டன.

சர்வதேச விண்வெளி நிலையத்தின் நீளம் 51 மீட்டர். அகலம் 109 மீட்டர். உயரம் 20 மீட்டர். மொத்த எடை 450 டன். சில சமயம் இது சுற்றுகின்ற உயரம் சற்றே குறையும். உயரத்தை மறுபடி அதிகரிக்க தக்க ஏற்பாடு உள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டவர்களில் அமெரிக்க, ரஷிய விண்வெளி வீரர்களின் எண்ணிக்கை தான் அதிகம். எனினும் கனடா மற்றும் ஜப்பானைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது அனுப்பப்படுகின்றனர். ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகள் என்ற முறையில் பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், பிரிட்டன், ஜெர்மனி ஆகியவற்றைச் சேர்ந்த விண்வெளி வீரர்களும் உயரே அனுப்பப்படுகின்றனர்.

அமெரிக்கா ஆரம்ப காலத்தில் இளைஞர்களை அனுப்புவதில்லை என்ற கொள்கையைக் கடைப்பிடித்து வந்தது. நாற்பது வயதை எட்டும் கட்டத்தில் தான் பொறுப்புணர்வு, சொன்னபடி செய்யும் குணம் ஆகியன இருக்கும் என்று நிபுணர்கள் கருதியதே இதற்குக் காரணம். இப்போது இக்கொள்கை தளர்த்தப்பட்டுள்ளது. ரஷியா இது விஷயத்தில் கண்டிப்பான கொள்கை எதையும் பின்பற்றவில்லை.

சர்வதேச விண்வெளி நிலையம் சுமார் 380 கிலோ மீட்டர் உயரத்தில் பறக்கிறது. அந்த உயரத்தில் இருந்தபடி அது மணிக்கு 27 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் ஓயாது பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கிறது  (விண்வெளியில் எதுவும் நிலையாக ஓரிடத்தில் இருக்க முடியாது). ஒரு தடவை சுற்றி முடிக்க 91 நிமிஷமே ஆவதால் அது ஒரு நாளில் பூமியை 15 தடவை சுற்றும். ஆகவே சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் அவ்வளவு தடவை சூரிய உதயத்தையும் சூரிய அஸ்தமனத்தையும் காண்பார்கள். ஆகவே அவர்களின் பகலும் இரவும் நமக்கு உள்ளதைப் போல இருப்பதில்லை.

விண்வெளி வீரர்களின் தூக்கம், பணி நேரம் முதலியன கீழே கட்டுப்பாட்டுக் கேந்திரத்தினால் நிர்ணயிக்கப்படுகின்றன. விண்வெளி வீரர்கள் வானில் நல்ல வேகத்தில் பூமியைச் சுற்றுவதை உணரமாட்டார்கள். நிலையாக ஓரிடத்தில் இருப்பது போலவே அவர்களுக்குத் தோன்றும். அதே நேரத்தில் அவர்களால் பூமி தனது அச்சில் சுழல்வதைக் காண இயலும்.

விண்வெளி நிலையத்துக்குள்
மேல் கீழ் என்பது கிடையாது
விண்வெளி என்பது பொதுவில் மனிதன் வாழ லாயக்கற்ற பிரதேசம். சர்வதேச விண்வெளி நிலையம் பறக்கின்ற உயரத்தில் ‘எடையற்ற நிலை’ தோன்றும். ஈர்ப்பு சக்தி என்பது அனேகமாக இராது. கையில் பிடித்துள்ள தம்ளரை விட்டால் அப்படியே அந்தரத்தில் நிற்கும். அல்லது இஷடத்துக்கு எந்தப் பக்கம் வேண்டுமானாலும் நகரும். மேல் கீழ் என்பதே இராது.  விண்கலத்துக்குள்ளாகக் கால் ஊன்றி நிற்க இயலாது. விண்கலத்தின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு அந்தரத்தில் மிதந்தபடி தான் செல்ல வேண்டும். சொல்லப் போனால் கால்களுக்கு வேலையே இல்லை.

போல்ட் ஸ்குரூ போட்டு முடுக்கி இருந்தால் ஒழிய மேஜை பறக்கும். கையில் எடுத்த தட்டை விட்டால் பறக்கும். ஸ்பூனில் எடுத்தால் வாய் அருகே கொண்டு செல்லு முன்னர் ஸ்பூனில் உள்ள உணவுப் பொருள் பறக்கும். தண்ணீர் குடிக்கலாம் என்றால் தம்ளரிலிருந்து தண்ணீர் வாய்க்குள் விழாது. தனித் தனி உருண்டைகளாக மாறி விண்கலத்துக்குள் நாலாபுறங்களிலும் பறக்கும். பணி புரியும் போதும் இப்படியான பிரச்சினைகள் தோன்றும். ஸ்குரூ டிரைவரை மறந்து அருகில் வைத்தால் அது பறந்து விண்கலத்தில் உயரே எங்காவது மூலையில் அந்தரத்தில் நிறகும்.

கைக்கு எட்டிய சாக்லேட் வாய்க்கு எட்டுமா?
படுக்கையில் படுக்க முடியாது. கொஞ்ச நேரத்தில் அந்தரத்தில் மிதப்பார்கள். விண்கல சுவரில் கோணிப்பை போல ஒரு பையைத் தொங்க விட்டு அதனுள் நுழைந்து கொண்டு உறங்கலாம். கஷ்டமாக இராது. ஈர்ப்பு சக்தி அனேகமாக இராது என்பதால் அன்றாட வேலைகளில் எண்ணற்ற பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருக்கும்

விண்வெளியில் உள்ள நிலைமைகள் உடலை பல வகைகளில் பாதிக்கும். கால்களுக்கு வேலை இல்லை என்பதால் அவை சூம்பிப் போனவை போல ஆகிவிடும். ஆகவே கால்களுக்குப் பயிற்சி அளிக்க விண்கலத்தில் சைக்கிள் பாணியிலான பயிற்சிக் கருவி இருக்கும். அதில் ஏறி உட்கார்ந்து சில மணி நேரம் பெடல் செய்தாக வேண்டும். புஜங்களும் மார்புப் பகுதியும் பெருத்து விடும். உயரம் சில செண்டிமீட்டர் அதிகரிக்கும். பூமிக்குத் திரும்பியவுடன் கால்களை ஊன்றி நிற்க இயலாது. எனினும் இவை எல்லாம் பூமிக்குத் திரும்பிய சில நாட்களில் சரியாகிவிடும்.

விண்வெளி வீரர்களுக்கென கீழே இருந்து மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை அனுப்பப்படுகின்ற ரெடிமேட் உணவுகளை சுட வைத்து சாப்பிட வேண்டும். அவற்றில் மெக்சிகோ வகை சுக்கா ரொட்டி முக்கிய அயிட்டம்.

சுக்கா ரொட்டி அடங்கிய தட்டு அந்தரத்தில் மிதக்கிறது
நடமாட்டம், உணவு, தூக்கம் எனப் பலவகைகளிலும் பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றைச் சமாளித்து அப்பிரச்சினைகளுக்கு இடையே தான் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டாக வேண்டும்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு அவ்வப்போது உணவு, தண்ணீர், காற்று, மருந்து போன்றவற்றை அவ்வப்போது எடுத்துச் சென்ற அமெரிக்க விண்வெளி ஷட்டில் வாகனங்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அவை அமெரிக்க மியூசியங்களுக்கு அனுப்பப்பட்டு விட்ட்ன. ஆகவே இப்போது ரஷியாவின் சரக்கு வாகனங்களும் சோயுஸ் விண்கலங்களும் (Soyuz) தான் இப்பணிகளைச் செய்து வருகின்றன. சோயுஸ் விண்கலங்கள் மூலம் தான் அவ்வப்போது விண்வெளி வீரர்கள் உயரே செல்கின்றனர் அல்லது அங்கிருந்து திரும்புகின்றனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு எதிர்பாராத விபத்து அல்லது ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. ஏற்கெனவே விண்ணில் செலுத்தப்பட்டு செயல் இழந்த பல செயற்கைக்கோள்கள் அல்லது அவற்றின் கழன்று போன உறுப்புகள் அதே உயரத்தில் தான் பறக்கின்றன். இவை சர்வதேச விண்வெளி நிலையத்தின் மீது மோதி சேதத்தை உண்டாக்கலாம்.

அண்மையில் இப்படி ஒரு நிலைமை ஏற்படலாம் என்று தோன்றிய போது விண்வெளி நிலையத்தின் பாதை சற்றே மாற்றப்பட்டு விபத்து தவிர்க்கப்பட்டது. சூரியனில் கடும் சீற்றங்கள் ஏற்படும் போது ஆபத்தான துகள்கள் பாய்ந்து வரும். அவ்வித நிலைமைகளில் விண்வெளி வீரர்கள் விண்கலத்தில் மிகவும் பாதுகாப்பான பகுதிக்குச் சென்று ஒண்டிக் கொள்வர். கீழே வருவதற்கான விண்கலம் ஒன்று எப்போதும் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தபடி இருக்கும். ஆகவே மிக ஆபத்தான நிலைமை தோன்றினால் அதன் மூலம் பூமிக்குத் திரும்பி விடுவர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தை 2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு கைவிடுவதென ஒரு திட்டம் உள்ளது. இதை 2028 ஆம் ஆண்டு வரை நீடிக்கலாம் என்று அண்மையில் ரஷியா யோசனை கூறியுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் பரிசோதனைகளை நடத்த இந்தியாவின் விண்வெளி அமைப்பான இஸ்ரோ (ISRO) விரும்புவதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது. இந்த விண்வெளி நிலையத்தை நிர்வகிக்கும் நாடுகளின் குழுவில் இந்தியா இல்லை (சீனாவும் இல்லை) என்பதால் இந்திய விண்வெளி வீரர்கள் சரவதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் வாய்ப்புகள் இல்லை.

விண்வெளியில் நீண்ட நாட்கள் தங்கி ஆராய்ச்சி நடத்துவதற்காக உயரே விண்வெளி நிலையம் அனுப்பப்படுவது இது முதல் தடவை அல்ல. 1971 ஆம் ஆண்டில் முதன் முதலாக ரஷியா (அப்போதைய சோவியத் யூனியன்) சல்யூட்(Salyut) என்னும் பெயர் கொண்ட விண்வெளி நிலையத்தை உயரே அனுப்பியது. பின்னர் பல சல்யூட் விண்கலங்கள் செலுத்தப்ப்ட்டன். இதில் ரஷிய விண்வெளி வீரர்கள் மட்டுமே தங்கிப் பணியாற்றினர்.

அமெரிக்க ஸ்கைலாப்
பின்னர் அமெரிக்கா ஸ்கைலாப் (Skylab) என்னும் பெயர் கொண்ட விண்வெளி நிலையத்தை உயரே அனுப்பியது. அது 1973 முதல் 1979 வரை செயல்பட்டது. அதில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் மட்டுமே தங்கி செயல்பட்டனர். அதன் பிறகு ரஷியாவின் மிர் (Mir) விண்கலம் 1986 ஆம் ஆண்டிலிருந்து 14 ஆண்டுக்காலம் செயல்பட்டது. அதுவரை உயரே அனுப்பப்பட்ட விண்வெளி நிலையங்களில் மிர் தான் பெரியது. ஆனால் இப்போது செயல்படும் சர்வதேச விண்வெளி நிலையம் தான் வடிவிலும் சரி, எடை அளவிலும் சரி மிகப் பெரியது.

ரஷிய மிர் விண்வெளி நிலையம்
இப்போது சீனா தனக்கென தனியே ஒரு விண்வெளி நிலையத்தை ஏற்படுத்திக் கொள்வதில் முனைந்துள்ளது. 2011 செப்டம்பர் கடைசியில் சீனா வானுலக மாளிகை என்னும் பெயர் கொண்ட ஆளில்லா விண்கலத்தை உயரே அனுப்பியது. இப்போது அது பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. சீனா பின்னர் நவம்பரில் ஒரு சிறிய விண்கலத்தை அனுப்ப, அது உயரே சென்று வானுலக மாளிகை விண்கலத்துடன் இணைந்து கொண்டது. மேலும் சில இணைப்புக் கலங்களை அனுப்பிய பின்னர் வானுலக மாளிகையில் தங்கி பணி புரிய சீன விண்வெளி வீரர்கள் அனுப்பப்படலாம். உயரே விண்வெளி நிலையத்தை நிறுவும் திட்டம் எதுவும் இந்தியாவிடம் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக